சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையம் மற்றும் உள்நாட்டு விமான நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்காக சென்னை விமான நிலைய ஆணையம் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை சர்வதேச முனையம் மற்றும் உள்நாட்டு முனையத்தில் மாலை மற்றும் இரவு நேரத்தில் விமானத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் பயணிகள் மற்றும் பயணிகளை வழியனுப்ப வருபவர்கள் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் இருக்கைகளில் அமர்ந்திருப்பார்கள். அந்தப் பகுதியில் கொசு தொல்லை அதிகமாகி இருப்பதால் தாங்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக பயணிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக உள்நாட்டு விமான நிலையத்தின் டெர்மினல் 1 வருகை பகுதியில் கொசு தொல்லை அதிகமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அதைப் போல சர்வதேச முனையமான டெர்மினல் 2, உள்நாட்டு முனையத்தின் டெர்மினல் 4 பகுதிகளிலும் கொசு தொல்லை வாட்டி வதைப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனால் குழந்தைகள், வயதானவர்கள் கடும் அவதி அடைவதோடு டெங்கு, மலேரியா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் அபாயம் இருப்பதாகவும் பயணிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். பயணிகள் மட்டுமின்றி விமான நிலையத்தில் இரவு நேர பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கும் கொசுக்கடியை சமாளிக்கும் நிலை உள்ளது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நாகேந்திரனின் உடல்நிலை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பொதுவாக சென்னை விமான நிலையத்தில், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கொசுக்களை விரட்டுவதற்கு கொசு மருந்து ஸ்பிரே அடிப்பது வழக்கம். இந்நிலையில், விமான நிலைய ஆணையம் உடனடியாக கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் புகார் அளித்துள்ளனர்.
விமான நிலைய அதிகாரி தகவல்
இதுகுறித்து விமான நிலைய அதிகாரியிடம் கேட்டபோது, '' வாரத்துக்கு ஒருநாள் கொசுக்களை கட்டுப்படுத்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் கொசு மருந்து ஸ்பிரே, புகை அடிக்கின்றோம். ஆனால், அதை மீறியும் கொசு தொல்லை அதிகரித்துள்ளதாக பயணிகள் புகார் அளித்துள்ளனர். அதனால் பயணிகள் குறைவாக உள்ள நாளாக பார்த்து அவர்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாத வகையில் கொசு மருந்து ஸ்பிரே மற்றும் புகை அடிக்கப்படும்.
மேலும், சென்னை விமான நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் அங்கு ஏதாவது தண்ணீர் தேங்கி இருந்தால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பயணிகள் அமரும் உள் பகுதிக்குள் கொசுக்கள் நுழையாமல் இருக்க கொசு திரைகள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் கொசு தொல்லையை கட்டுப்படுத்தி பயணிகளுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.