சென்னை: தமிழ்நாட்டில் சமீப நாட்களாக ரயில் நிலையங்களில் நடந்துள்ள பாலியல் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வேலூர் அருகே ரயிலில் சென்று கொண்டிருந்த கர்ப்பிணி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளானதுடன், அவர் ரயிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்ற பெண் காவலர் ஒருவரை மதுபோதையில் ஒரு நபர் கீழே தள்ளி செயின் பறிப்பில் ஈடுப்பட்டு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவமும் அதிர வைத்தது.
இதுபோன்ற சம்பவங்களை அடுத்து, ரயில்களில் பயணிக்கும் மற்றும் ரயில் நிலையங்களுக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் தமிழ்நாடு ரயில்வே டிஜிபி வன்னிய பெருமாள் இன்று ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையில் இரவு 10 மணி முதல் 12 மணி வரை ரயில் நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும், பெண்கள் பயணிக்கும் பெட்டிகளில் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: மாணவிகளின் பிரச்னைகளை கேட்டறிய “போலீஸ் அக்கா” வந்தாச்சு!
இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் செயல்படுத்த அவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிகிறது. மேலும், ரயில் நிலையங்களில் எவ்வாறு பாதுகாப்பை பலப்படுத்துவது? சிசிடிவி கேமராக்கள் அமைப்பது, ரயில் பயணிகளை ஒழுங்குப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது.
பிஜிபிக்களின் இந்த முக்கிய ஆலோசனைக்குப் பிறகு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில்களிலும் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.