டெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத் (CBSE / சி.பி.எஸ்.இ) தேர்வுகள் இன்று (பிப்ரவரி 15) தொடங்கியது. இந்த பாடத்திட்டத்தில் பயிலும் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆங்கில பாடத்திற்கும், 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தொழில்முனைவு பாடத்திற்குமான தேர்வுகளை எழுதினர். காலை 10:30 மணிக்கு தொடங்கியத் தேர்வு பகல் 1:30 மணிவரை நடைபெறுகிறது.
நாடு முழுவதிலும் இருந்து சுமார் 8,000 பள்ளிகளைச் சேர்ந்த 44 லட்சத்திற்கும் அதிகமான மாணாக்கர் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதற்காக 7,842 தேர்வு மையங்களும், வெளிநாட்டில் 26 தேர்வு மையங்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு மார்ச் 18ஆம் தேதி வரையிலும், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 4-ஆம் தேதி வரையிலும் தொடர்ந்து நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வுக்கான அட்டவணையை பார்க்க இந்த இணைப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தேர்வெழுதும் மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள்:
வழக்கமான பள்ளி சீருடைகளை தேர்வெழுத வரும் மாணவர்கள் அணிய வேண்டும்; அதே நேரத்தில் தனியார் தேர்வர்கள் வெளிர் நிற ஆடைகளை தேர்வு செய்ய வேண்டும்.
மாணவர்கள் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்னதாக தேர்வு மையத்திற்கு வந்து, விடையளிப்பதற்கு முன் வினாத்தாள் வழிமுறைகளை கவனமாகப் படிக்க வேண்டும்.
தேர்வு மையத்திற்குள் தடைசெய்யப்பட்ட பொருட்களையும் சி.பி.எஸ்.இ பட்டியலிட்டுள்ளது. அதில்,
- மொபைல் போன்கள்
- புளூடூத் சாதனங்கள்
- இயர்போன்கள்
- ஸ்மார்ட்வாட்ச்கள்
- கேமராக்கள்
- பணப்பைகள், கைப்பைகள்
- கண்ணாடிகள்
ஆகியவை அடங்கும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட முன் அனுமதி பெற்ற மாணவர்களைத் தவிர, வேறு யாருக்கும் உணவோ, எந்த வித பானங்களோ தேர்வறைக்குள் எடுத்துசெல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்கள் நுழைவுச் சீட்டுகள், பள்ளி அடையாள அட்டைகளை (ID Card) எடுத்துச் செல்ல வேண்டும்; அதே நேரத்தில் தனியார் தேர்வர்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள சான்றிதழை உடன் வைத்திருக்க வேண்டும்.
தேர்வு நாட்களில் மாணவர்களின் பயணம் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC), CISF உடன் இணைந்து சிறப்பு வசதிகளை அறிவித்துள்ளது. மெட்ரோ நிலையங்களில் சோதனை அல்லது டிக்கெட் வாங்கும் போது மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் கருத்து:
டெல்லியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவர், "இன்று ஆங்கிலத் தேர்வுக்கு நான் நன்றாகத் தயாராகிவிட்டேன். எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. எல்லாவற்றையும் நன்றாகத் திருத்திவிட்டேன்," என்று ஏ.என்.ஐ செய்திகளிடம் கூறியுள்ளார்.
![சி.பி.எஸ்.இ தேர்வெழுதும் மாணவி பேட்டியளித்தபோது எடுக்கப்பட்ட படம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-02-2025/23548754_cbse-student.jpg)
லக்னோவில் உள்ள ஒரு மையத்தில் 10-ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வு எழுதும் மற்றொரு மாணவி, "நான் உற்சாகமாகவும் பதட்டமாகவும் இருக்கிறேன். நான் நன்றாக படித்துள்ளேன். இன்று ஆங்கில மொழித் தேர்வு உள்ளது. ‘நாம் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும்; ஆனால் பதட்டப்படத் தேவையில்லை... நாம் மன அழுத்தத்திற்கு ஆளாகக் கூடாது என்றும் பிரதமர் கூறினார்" என்று தெரிவித்தார்.
அதிஷி வாழ்த்து:
தேர்வெழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருக்கும் முன்னாள் டெல்லி முதலமைச்சர் அதிஷி, “பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கான CBSE தேர்வுகள் இன்று தொடங்கவுள்ள நிலையில், இந்த முக்கியமான தேர்வுகளை எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
As the CBSE Board Exams for Class X and XII begin today, I extend my heartfelt best wishes to all students appearing for these important exams.
— Atishi (@AtishiAAP) February 15, 2025
This marks a significant milestone in your academic journey, and I encourage you to approach it with confidence, determination, and a…
இது உங்கள் கல்விப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. மேலும், இதை நம்பிக்கையுடனும், உறுதியுடனும், நேர்மறையான மனநிலையுடனும் அணுக நான் உங்களை ஊக்குவிக்கிறேன். உங்களை நம்புங்கள், உங்கள் திறனை நம்புங்கள், மேலும் தேர்வுகள் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிய ஒரு படிக்கல் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!