வேலூர்: மாவட்டம் முழுவதும் காணாமல் போன சுமார் ரூ. 46 லட்சம் மதிப்பிலான 230 செல்போன்களை மீட்ட போலீசார் அதனை தற்போது உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
வேலூர் மாவட்ட காவல்துறையினர் உருவாக்கிய செல்போன் டிராக்கர் (Cell Tracker) வாட்ஸ்அப் எண் மூலம் தொலைந்து போன மற்றும் திருடு போன செல்போன்கள் குறித்துப் புகார் அளிக்கும் முறை கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல், பல்வேறு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தற்போது 479 செல்போன் புகார்கள் பெறப்பட்டுள்ளது.
இதில்,சுமார் 46 லட்சம் மதிப்பிலான 230 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவற்றை வேலூர் காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் கூறுகையில்,“ தொலைந்து போன மற்றும் திருடு போன செல்போன்களை கண்டுபிடித்து இன்று உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளோம். வெளிமாநில மதுக்கள் பேர்ணாம்பட்டு மற்றும் குடியாத்தம் வழியாக கடத்தி வரப்படுகிறது. இதனால், இவ்விரண்டு சோதனைச் சாவடிகளில் நடமாடும் கண்காணிப்பு குழு மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் மூலம் மது விற்கும் நபர்களை கைது செய்து வருகிறோம்.
இதையும் படிங்க: "7 மாதங்களில் 60-க்கும் மேற்பட்ட படுகொலைகள்' - தமிழ்நாடு அரசு மீது குற்றம்சாட்டும் பட்டியலின அமைப்புகளின் பிரதிநிதிகள்! |
மேலும், உள்ளூர் பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையையும் தடுத்து வருகிறோம். பாலியல் சீண்டல்கள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியையும் காவல்துறை ஏற்படுத்தி வருகிறது. கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களை மறுவாழ்வு செய்ய காவல்துறை உதவி வருகிறது. கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையையும் முழுமையாக தடுத்துள்ளோம்.
தொடர்ந்து, வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் சட்டத்திற்கு புறம்பாக, மாவட்டத்தில் உள்ள அங்கிகாரம் இல்லாத விடுதிகளில் தங்கி இருப்பவர்களை கண்காணிக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். தமிழக அரசின் உத்தரவுப்படி, டிஎஸ்பி மற்றும் எஸ்பி முகாம்களில் பணியில் உள்ள பெண் காவலர்கள் தற்போது அங்கிருந்து பணிமாற்றம் செய்யப்பட்டு, தற்போது முகாம்களில் ஆண் காவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள். பெண் காவலர்களை வேறு பணிகளுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.