சென்னை: வடமாநிலத்தில் இருந்து பிரசாந்த கிஷோர், சுனில் போன்ற வியூக வகுப்பாளர்கள் வந்து தேர்தல் பணி செய்தால், தமிழகத்தில் இருப்பவர்களுக்கு மூளை மழுங்கி விட்டதா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எனக்கு யாரிடம் இருந்தும் பாதுகாப்பு தேவையில்லை. இந்த மக்களுக்காக களத்துக்கு வந்திருக்கிறேன். நான் தான் இந்த மக்களுக்கு பாதுகாப்பு.
காமராஜர் முதல்வராக இருந்தபோது சைரன் வைத்த வாகனம் வேண்டாம் என்று சொன்னார். வந்த வாகனத்தை திரும்பி போக சொன்னவர் அவர். மக்கள் அரசியலில் பாதுகாப்பு தேவையில்லை. தம்பி விஜய் போல புகழ் பெற்ற நடிகருக்கு என்னை மாதிரி இருப்பது சிரமம். என்னைப் போல நின்று பேச முடியாது. அதனால் அவர் பாதுகாப்பு கேட்டு வாங்கி இருப்பார். இதை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவை இல்லை. பாதுகாப்பு கொடுத்தால் விஜய் பாஜகவிற்கு போய் விடுவார் என்பது சரியல்ல. அப்புறம் பாஜகவிலேயே இருக்கும் அண்ணாமலைக்கு எதற்கு பாதுகாப்பு?
நாங்களே ஒவ்வொருவரும் வெடிகுண்டு தான்... ஒரு வார்த்தை பேசினால் ஒரு வாரத்துக்கு ஓடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வார்த்தையும் அணு குண்டுதான் என்றார்.
ஓட்டுப் பிச்சை எடுப்பதாக அண்ணாமலை விமர்சனம் செய்தது குறித்து பதிலளித்த சீமான், "கோவை குண்டுவெடிப்பை பற்றி பேசுபவர்கள், குஜராத் பற்றியும் பேச வேண்டும். ராஜீவ் காந்தி அனுப்பிய படை இலங்கையில் ஏற்படுத்திய பேரழிவையும் பேச வேண்டும். இஸ்லாமியர்கள் எனக்கு ஓட்டு போட்டதில்லை. ஓட்டு போடவில்லை என்றாலும் அவர்களுக்காக இருப்பவன் நான். நான் சிறையில் இருக்கும் போது பாட்ஷாவை அப்பா என்று தான் அழைப்பேன். ஏதாவது பேசினால் கைக்கூலி , கால் கூலி ஓட்டு பிச்சை என்று சொல்கின்றீர்கள். நாங்கள் ஓட்டு பிச்சை எடுக்கிறோம். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் கூறுகையில், "பிரபாகரன் படத்தை பயன்படுத்துவதில் அரசியல் ஆதாயம் இருக்கிறது என்றால் நீங்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது தானே? எல்லா கட்சியினரும் பிரபாகரன் படத்தை போட்டு கொள்ளுங்கள். என் மீது 200 வழக்குகள் உள்ளன. ஒன்றரை வருஷம் சிறையில் இருந்திருக்கிறேன். பாஸ்போர்ட்டை முடக்கி வைத்துக் கொண்டு எந்த நாட்டிலும் அனுமதிக்க மாட்டேன் என்கின்றனர்.
கள்ளச்சாராயத்தை தடுக்க முயன்ற இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் முன்விரோதம் என சொல்வதுதான் மிகவும் வலிக்கிறது. இதற்கும் அதிகாரிகளை தான் காரணம் காட்டுவார்கள். அரசுக்கு இதற்கும் தொடர்பில்லை என்று சொல்வார்கள்.
திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கு மதுரை மாவட்ட ஆட்சியர், கள்ளச்சாராய உயிரிழப்புக்கு கள்ளக்குறிச்சிக்கு மாவட்ட ஆட்சியர் என பலிகடா ஆக்கினர்" என்றார்.
மேலும், "தவெக தலைவர் தம்பி விஜய்க்கு ஜான் ஆரோக்கியசாமி என்பவர் வியூக ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். ஆதவ் அர்ஜுனா என்ற வியூக பொறுப்பாளர் இருக்கிறார். இவர்களுக்கு இந்த மண்ணின் சிக்கல்கள் தெரியும். பீகாரில் இருந்து ஒருத்தர் வரவேண்டும் என்றால் உங்களுக்கெல்லாம் மூளை இருக்கிறதா இல்லையா? தமிழகத்தில் யாருக்கும் மூளை எதுவும் இல்லை என்று நினைக்க மாட்டார்களா?" என கேள்வி எழுப்பினார்.
திருப்பரங்குன்றம் பிரச்சனை, அத்திக்கடவு அவிநாசி பிரச்சனை, நொய்யல் பிரச்சனை இது எல்லாம் பிரசாந்த் கிஷோருக்கு தெரியுமா? என கேள்வி எழுப்பிய அவர், கருணாநிதி, ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இருக்கிற வரை வியூக வகுப்பாளர்களுக்கு தேவை இருந்ததா?
திமுகவிலேயே துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஆ.ராசா உள்ளிட்டவர்களை விட பிரசாந்த் கிஷோர் போன்றோர் பெரிய ஆளா? என்றும் வினவினார்.
சுனில், பிரசாந்த கிஷோர் போன்றவர்கள் வெளியில் இருந்து வந்து தான் வேலை பார்க்க வேண்டுமா? தமிழகத்தில் இருப்பவர்கள் மூளை மழுங்கி விட்டதாக நினைப்பார்கள். இதை தன்மான இழப்பாக பார்க்கிறேன். ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா ஆகியோரே விஜய்க்கு போதுமானவர்கள்.
இவ்வாறு சீமான் கூறினார்.