பெங்களூரு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் தமிழ்நாடு அரசிடம் இன்று ஒப்படைக்கப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சராக 1991-ம் ஆண்டு முதன்முறையாக ஜெயலலிதா பதவியேற்றார். 1996-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த அவர் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. 1996-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், ஜெயலலிதா மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை நடத்தி 27 கிலோ தங்கம், வைர நகைகள், 700 கிலோ வெள்ளிப் பொருட்கள், 11,344 பட்டுச் சேலைகள், 740 விலையுயர்ந்த காலணிகள், 250 சால்வைகள், 12 குளிர்சாதன பெட்டிகள், 10 தொலைக்காட்சிப் பெட்டிகள், 8 விசிஆர்கள், 1 வீடியோ கேமரா, 4 சிடி பிளேயர்கள், 2 ஆடியோ டெக்குகள், 24 டூ-இன்-ஒன் டேப் ரெக்கார்டர்கள், 1040 வீடியோ கேசட்டுகள், 3 இரும்பு லாக்கர்கள், ரூ.1,93,202 ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது. அப்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்த நகைகள், சொத்துகள் ஆகியவை கர்நாடக மாநில கருவூலத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இதனிடையே, சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் நகைகள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க கர்நாடக சிறப்பு நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது.
![தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்ட ஜெயலலிதாவின் தங்க வாள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-02-2025/kn-bng-01-jayalalitha-case-7202806_15022025170151_1502f_1739619111_690_1502newsroom_1739627178_170.jpg)
ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக் ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 2016-ம் ஆண்டு ஜெயலலிதா உயிரிழந்த நிலையில், சொத்துக்களை தங்களிடம் ஒப்படைக்க அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவர்களது மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
![ஜெயலலிதா உருவ தங்க முத்திரை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-02-2025/kn-bng-01-jayalalitha-case-7202806_15022025170151_1502f_1739619111_787_1502newsroom_1739627178_1082.jpg)
மேலும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி தீபா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து, கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் நகைகள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கும் பணியை கர்நாடக அரசு நேற்று தொடங்கியது. இதனையடுத்து 27 கிலோ நகைகள் உள்ளிட்டவை தமிழ்நாடு அரசு அதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
![வைரம் பதிக்கப்பட்ட தங்க கிரீடம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-02-2025/kn-bng-01-jayalalitha-case-7202806_15022025170151_1502f_1739619111_114_1502newsroom_1739627178_769.jpg)
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக அரசின் சிறப்பு அரசு வழக்கறிஞர் கிரண் ஜவாலி, "நீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முன்னிலையில் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், 27 கிலோ தங்க நகைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், 1526 ஏக்கர் நிலத்தின் சொத்து பத்திரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மூத்த காவல்துறை அதிகாரிகளின் தலைமையில், ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பொருட்கள் 6 டிரங்குகளில் பலத்த பாதுகாப்புடன் தமிழ்நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன" என்று கூறினார். ஜெயலலிதாவின் பட்டுப் புடவைகள் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
செப்டம்பர் 27, 2014 அன்று, பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றம், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ரிசர்வ் வங்கி, எஸ்பிஐ அல்லது பொது ஏலம் மூலம் விற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. விற்பனையிலிருந்து கிடைக்கும் தொகையை வைத்து அபராதத்தை செலுத்த வேண்டும் கூறியிருந்தது. ஆனால், 2016-ம் ஆண்டு ஜெயலலிதா இறந்துவிட்டார்.