திருவனந்தபுரம்:சி ஸ்பேஸ் (C Space) என்ற பெயரில் உருவாக்கப்பட்டு உள்ள ஓடிடி தளத்தை மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் மூலம் இந்த செயலியை பயனர்கள் பதிவிறக்கம் செய்து புது புது உள்ளடக்கங்களை கண்டு மகிழலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கேரள மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த ஓடிடி தளத்தில் பயனர்கள் பார்க்கும் உள்ளடக்கங்களுக்கு மட்டும் பணம் செலுத்த வேண்டும் என்றும் ஒவ்வொரு உள்ளடக்கத்திற்கு ஏற்ற வகையில் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது. உதாரணத்திற்கு பெரிய திரைப்படங்களை 75 ரூபாய் செலுத்தியும், 40 நிமிட படங்கள் 40 ரூபாய்க்கும், 30 மற்றும் 20 நிமிட குறும் படங்களை முறையே 30 மற்றும் 20 ரூபாய் செலுத்தியும் பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கலைநயமிக்க படைப்புகளை ஊக்குவிக்கும் விதமாக இந்த செயலி உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், ஓடிடி தளம் மூலம் வரும் வருவாயில் பாதித் தொகை திரைப்பட அகாடமிக்கும், மீதத் தொகை பட தயாரிப்பாளர்கள் மற்றும் காப்புரிமை கொண்டு இருப்பவர்களுக்கு பிரித்து வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.