நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் ரயில் நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர் திடீரென கட்டையால் தாக்கியதில், நடைமேடையில் உறங்கிக் கொண்டிருந்த தமிழர் உட்பட இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திங்கட்கிழமை (நேற்று) அதிகாலை, நாக்பூர் ரயில் நிலையத்தில் உள்ள 7வது நடைமேடையில் ரயிலுக்காக பயணிகள் காத்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு திடீரென வந்த மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர் ஒருவர், நடைமேடையில் உறங்கிக் கொண்டிருந்த 6 முதல் 7 நபர்கள் மீது மரத்தால் ஆன ஒருவித கட்டையைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் அதிகாலை 3.30 மணியளவில் நிகழ்ந்ததாக பயணிகள் தெரிவிக்கின்றனர். அப்போது, வலி தாங்காமல் அவர்கள் அலறி கதறியுள்ளனர். அந்த அலறல் சத்தம் கேட்டு, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து பயணிகளை மீட்டதுடன், தாக்குதல் நடத்திவிட்டு தப்ப முயன்ற நபரையும் சுற்றி வளைத்துப் பிடித்துள்ளனர். இந்நிகழ்வு ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்களைப் பீதியடைய வைத்துள்ளது.