உத்தரபிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில் ஸ்மிருதி இரானி பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கான வேட்புமனுவையும் நேற்று தாக்கல் செய்தார்.
இந்நிலையில், அந்த மனுவில் தான் மூன்று வருட கல்விப்பயிற்சியை முழுமையாக முடிக்கவில்லை என ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
2014ஆம் ஆண்டு இதே மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி, தான் தாக்கல் செய்த வேட்புமனுவில் 1994ஆம் ஆண்டு டெல்லி பல்கலைகழகத்தில் தொலைதூர கல்வி மூலம் இளங்கலை வணிகவியல் கற்றதாகத் தெரிவித்தார்.
அதேபோல், 2004ஆம் ஆண்டு டெல்லி சந்த்னி சவுக் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் கபில் சிபலுக்கு எதிராக போட்டியிட்ட ஸ்மிருதி இரானி, தனது வேட்பு மனுவில் 1996ஆம் ஆண்டு டெல்லி பல்கலைகழகத்தில் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை பட்டம் பெற்றதாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையில் தற்போது தான் மூன்று வருட கல்விப்பயிற்சியை முடிக்கவே இல்லை என ஸ்மிருதி தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதனிடையே தேர்தல் ஆணையம் ஸ்மிருதி இரானியின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் செய்திதொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கூறுகையில்,
"இது வெறும் நகைப்புக்குரிய விஷயமல்ல. மிகவும் தீவிரமான விஷயம். மக்கள் அனைவரும் முட்டாள் ஆக்கப்படுகிறார்கள். அவரின் வேட்பு மனுத்தாக்கல் என்பது ஊழலுக்கான ஒரு பயிற்சி.
மோடி அவர்களே, தேசத்தை பாதுகாப்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் ஸ்மிருதி இரானியில் பட்டயப்படிப்பு குறித்து தகவல் தெரிவியுங்கள்" எனக் கூறியுள்ளார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா சத்ருவேதி, ஸ்மிருதி இரானி தொடர்ந்து பொய் கூறுபவர் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.