அகமதாபாத்: 2002ஆம் ஆண்டு குஜராத் வன்முறை சம்பவத்தில் உயிரிழந்த தமது கணவர் எஹ்சான் ஜாஃப்ரி உள்ளிட்ட 69 பேர் கொல்லப்பட்டதற்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்திய ஜாகியா ஜாஃப்ரி முதுமை காரணமாக காலமானார்.
அயோத்தியில் இருந்து திரும்பிய சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கோத்ரா அருகே எரிந்ததில் 59 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு அதற்கு எதிர்வினையாக 2002-ம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் வன்முறை வெடித்தது. இதில் அகமதாபாத்தில் குல்பர்க் சொசைட்டி என்ற குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த காங்கிரஸ் எம்பி எஹ்சான் ஜாஃப்ரி உள்ளிட்ட 69 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை தண்டிக்க வலியுறுத்தி விசாரணை நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை வழக்குகளை முன்னெடுத்தவர் ஜாகியா ஜாஃப்ரி. இதனால், சர்வதேச அளவில் ஊடகங்களின் தலைப்பு செய்திகளில் இடம் பெற்றவர். இந்த நிலையில் அகமதாபாத் நகரில் உள்ள தமது மகளின் வீட்டில் ஜாகியா ஜாஃப்ரி முதுமை காரணமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: புதிய வருமான வரி நடைமுறையில் கணக்கை தாக்கல் செய்வோருக்கு ரூ.12 லட்சம் வரை இனி No Tax! ரூ.75,000 நிலைக்கழிவும் அறிவிப்பு!
இது குறித்து பேசிய அவரது மகன் தன்வீர் ஜாஃப்ரி, "என்னுடைய தாய் அகமதாபாத்தில் உள்ள சகோதரியின் வீட்டுக்கு சென்றிருந்தார். எப்போதும் போல இன்று காலை முதல் வழக்கமான பணிகளை மேற்கொண்டார். சகோதரி உள்ளிட்டோரிடம் வழக்கம் போல பேசிக் கொண்டிருந்தார். திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக உணர்ந்ததாக தெரிவித்திருக்கிறார். உடனடியாக மருத்துவர் வரவழைக்கப்பட்டார். அவர் வந்து பரிசோதனை செய்ததில் என் தாய் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது," என்றார்.
Zakia Appa a compassionate leader of d human rights community passed away just 30 minutes ago!Her visionary presence will be missed by d nation family friends & worrld! Tanveernhai, Nishrin, Duraiyaappa, grandkids we are with you! Rest in Power and Peace Zakia appa! #ZakiaJafri pic.twitter.com/D6Un1cj346
— Teesta Setalvad (@TeestaSetalvad) February 1, 2025
ஜாகியா ஜாஃப்ரிக்கு ஆதரவாக சட்டப்போராட்டத்தில் உடன் நின்ற தன்னார்வலர் டீஸ்டா செடல்வாட் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மனித உரிமைகள் சமூகத்தின் மீது ஈடுபாடு கொண்ட ஜாகியா ஜாஃப்ரி 30 நிமிடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது கண்ணோட்டத்தை இப்போது நாம் இழந்திருக்கின்றோம்,"என்று கூறியுள்ளார். குஜராத் வன்முறை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை முடிவுக்கு வந்ததை 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் உச்ச நீதிமன்றம் உறுதி செய்த்து. இதன் மூலம் ஜாகியா ஜாஃப்ரியின் சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்தது.