சென்னை: மத்திய அரசின் பட்ஜெட்டால் தமிழ்நாட்டில் தொழில்துறை பலனடையும் என்றும் அனைத்து துறைகளுக்கும் பயன்படும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது எனவும் சிஐஐ அமைப்பின் தென் மண்டல தலைவர் நந்தினி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று ஈடிவி பாரத் தமிழ்நாடுக்கு பேட்டியளித்த நந்தினி கூறியதாவது;
குழந்தைகளுக்கு தேவையானவை
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்தே செயல்படுத்தப்பட்டுள்ளதாக பார்க்கிறோம். பெண்கள், குழந்தைகள், கல்வி, விவசாயம் ஆகிய துறைகளும் தேவையானவை ஆகும். இந்தியாவில் 140 கோடி மக்கள் தொகையில் அதிக அளவில் விவசாயிகள் இருக்கின்றனர். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு தேவையானவை அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தடங்கல் இருக்கக் கூடாது என்பதற்காக பிராட்பேண்ட் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடன் திட்டங்கள்
அடல் டிங்கரிங் லேப் (ATL) அமைப்பதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தொழில் தொடங்குவதற்கு கடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மட்டுமல்லாமல் கர்ப்பிணி தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து திட்டம் அறிவிக்கப்பயிருப்பது நல்ல முன்னெடுப்பாகும்.
புற்று நோய் மையம்
புற்று நோய்க்காக 200 மாவட்ட மருத்துவமனைகளில் மையம் துவங்கப்படும் என அறிவித்துள்ளதும் நல்ல முன்னெடுப்பாகும். வேளாண்மைக்கு அளிக்கப்பட்டுள்ள திட்டங்களை நன்றாக பயன்படுத்தினால் விவசாயிகளுக்கு பலன் அளிக்கும். காலநிலை மாற்றத்தால் விவசாயம் பாதிப்படைந்துள்ள நிலையில் விவசாயத்திற்கு உறுதுணையான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
பருத்திக்கு முக்கியத்துவம்
பெண்கள் வேலைக்கு சென்றால் குடும்பம் மற்றும் நாட்டுக்கே உறுதுணையாக இருக்க முடியும் என கூறுகின்றனர். பெண்களுக்கு வியாபாரம் செய்யலாம் என்ற எண்ணம் இருந்தாலும் அதற்கான நிதி இல்லாமல் இருக்கும். அரசு குறைந்த வட்டியில் நிதி உதவி வழங்கும் பொழுது நன்றாக வியாபாரம் செய்ய முடியும்.
விவசாயத்தில் பருத்தி ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால், தரமான பருத்தி கிடைத்தால் நல்ல துணி தயாரிக்க முடியும். துணி நூல் துறையை இந்த நிதிநிலை அறிக்கை மீட்டெடுக்கும். துணி நூல் துறையில் எப்பொழுதும் ஏற்றத்தாழ்வு இருந்து கொண்டிருக்கும், அரசு இதற்கு தனி முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக கருதுகிறோம்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் தொழில்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அனைத்து துறைகளுக்கும் பயன்படும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது'' என அவர் தெரிவித்தார்.