சென்னை: மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் உயிர் காக்கும் 36 வகை மருந்துகளுக்கு சுங்க வரி முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை மருத்துவர்கள் வரவேற்றுள்ளனர்.
இது குறித்து காவேரி மருத்துவமனை நிறுவனரும் மற்றும் செயல் தலைவருமான மருத்துவர் சந்திரகுமார், ஈடிவி பாரத் தமிழ்நாடுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;
மத்திய அரசின் பட்ஜெட்டில் உயிர் காக்கும் 36 மருந்துகளின் சுங்க வரியை நீக்கி உள்ளனர். புற்றுநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற மருந்துகளுக்கான சுங்க வரி முழுவதும் நீக்கப்பட்டுள்ளது. மேலும் 6 மருந்துகளுக்கான சுங்க வரியை 5 சதவீதம் வரையில் குறைத்துள்ளனர். மேலும் வரும் 5 ஆண்டுகளில் எல்லா மாவட்ட மருத்துவமனைகளிலும் புற்று நோய் சிகிச்சைக்கான மையம் அமைக்கப்படும் எனவும், இந்தாண்டு 200 இடங்களில் புற்று நோய் மையம் நிறுவப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் 10 ஆயிரம் மருத்துவ பணியிடங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். 'ஹீல் இன் இந்தியா' என்ற திட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சிகிச்சை பெறுவதற்கு விசா எளிமைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுளது.
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 8 கோடிக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் டெல்லி, மும்பை, ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களில் ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து அதிக அளவு மருத்துவம் பார்க்க வருகின்றனர். விசா நடைமுறைகள் எளிமைப்படுத்தும் போது சிகிச்சைக்காக வெளிநாட்டினர் அதிக அளவில் வர வாய்ப்புள்ளது.
புற்றுநோய் அதிகரித்துள்ளது
மருத்துவச் சுற்றுலாவுக்கான விசா எளிமைப்படுத்தி உள்ளதால் தனியார் மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் ஹோட்டல், சுற்றுலாத்தலங்கள் போன்றவற்றுடன் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும். புற்றுநோய் கடந்த 10 ஆண்டுகளை விட தற்போது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் 200 மாவட்ட மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் ஆரம்பிக்கப்படுவது வரவேற்கத்தக்கது.
செயற்கை நுண்ணறிவு
பொருளாதாரம் குறைவாக உள்ளவர்களிடம் ஊட்டச்சத்து குறைபாடு இருந்து வருகிறது. ஊட்டச்சத்து திட்டம் இவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். மருத்துவ துறையில் செயற்கை தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்த துவங்கவில்லை. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைத்து துறைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுகாதார துறையில் துல்லியமாக கணக்கிடவும், வேகமாக முடிவுகளை தெரிந்துக் கொள்ளவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயனுள்ளதாக அமையும்'' என அவர் தெரிவித்தார்.