திருநெல்வேலி: 2047 ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்ற மத்திய பட்ஜெட் அறிக்கை கனவிலும் நடக்காது என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் விமர்சித்துள்ளார்.
நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுப உதயகுமார் கூறியதாவது;
அணுமின் சக்தி உற்பத்திக்கு ஏராளமான நிதியை மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்ததோடு 2047ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் மின்சாரம் தயாரிப்பதாக தெரிவித்துள்ளது. இல்லாத ஊருக்கு போகும் வழியை இந்திய அரசும், அணுசக்தி துறையும் கடந்த 77 ஆண்டுகளாக சொல்லி வருகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 40 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்போவதாக அறிவிப்பு வெளியானது. இப்போது 100 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உண்மையில் 8,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே அணு மின்சாரமாக இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இது மொத்த மின் உற்பத்தியில் மூன்று சதவீதம் மட்டுமே ஆகும். 2047 ஆம் ஆண்டுக்குள் நூறு ஜிகாவாட் மின்சாரம் தயாரிப்பு என்பது கனவிலும் நடக்காத கதை. கடந்த நிதி நிலை அறிக்கையில் நிதியமைச்சர் 'ஸ்மால் மாடுலர் ரியாக்டர்' என்ற சிறிய வடிவிலான அணு மின் நிலையங்களை இந்தியா முழுவதும் அமைக்க போவதாக அறிவித்தார். கடந்த ஓராண்டு காலம் நிறைவு பெற்ற பின்னரும் அதற்கான திட்ட வரைவு அறிக்கையை கூட தயார் செய்யவில்லை.
100 ஜிகாவாட் மின் உற்பத்தி
அதானி, அம்பானி போன்றவர்களை ஒன்று சேர்ந்து அணுமின்சார உற்பத்தியை தனியார்மயப்படுத்தி சுமார் 125 பில்லியன் டாலர் அளவுக்கு அணு மின்சக்தி திட்டத்தை முன்னெடுக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அணுசக்திக்கு எதிரான தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. இந்த திட்டம் நடைமுறைப்படுத்த முடியாத மக்களை ஏமாற்றும் திட்டம். அணுசக்தி மின் திட்டம் என்பது சுத்தமான மின் சக்தி என நீண்ட காலமாக சொல்வது உண்மை அல்ல. அணு மின் நிலையம் கட்டுவதற்கு 25 முதல் 30 ஆண்டுகள் ஆகிறது. அந்த நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரம் கார்பன் டை ஆக்சைடு உருவாக்கும்.
அணுமின் நிலையம் இயங்கும் போதும் அதற்கு தேவையான மின்சாரம் கார்பன் டை ஆக்சைடு உருவாக்கும் மூலத்திலிருந்து உருவாக்கப்படுகிறது. அணுமின் நிலையத்தை செயலிழக்க செய்யும் போதும், அழுக்கான ஆபத்தான மின்சாரத்தை தான் பயன்படுத்துகின்றனர்'' என சுப.உதயகுமார் தெரிவித்தார்.