புதுடெல்லி: 2025-26ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பீகார் மாநிலத்துக்கு என சில சிறப்பு திட்டங்களை அவர் அறிவித்தார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எட்டாவது முறையாக மத்திய நிதி நிலை அறிக்கையை மக்களவையை இன்று தாக்கல் செய்தார். முன்னதாக அவர் நிதி அமைச்சகத்தில் இருந்து பட்ஜெட் உரை அடங்கிய கோப்பை எடுத்துச் சென்றார். மத்திய பட்ஜெட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பீகாருக்கு முக்கியத்துவம்: இதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசினார். அப்போது நிர்மலா சீதாராமன் பேசுகையில்,"2014ஆம் ஆண்டுக்குப் பிறகு அமைக்கப்பட்ட நாட்டில் உள்ள ஐஐடிகளில் கூடுதல் கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படும். இதனையடுத்து பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஐஐடியிலும் கட்டமைப்பு மேம்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
பீகாரில் தேசிய உணவு தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும். இந்த மையத்தின் மூலம் உணவு தொழில்நுட்பம் சார்ந்த தொழில்முனைவோருக்கும், முன்னெடுப்புகளுக்கும் ஆதரவு அளிக்கப்படும். இதன் மூலம் விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கும்.
![மத்திய பட்ஜெட் அறிக்கை அடங்கிய கோப்புடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01-02-2025/1200-675-23447926-1076-23447926-1738382694817_0102newsroom_1738385732_788.jpg)
மக்கானா மூலிகை விவசாயிகளுக்கு சலுகை: மக்கானா என்று அழைக்கப்படும் ஃபாக்ஸ் நட் உற்பத்தியை அதிகரிக்க மக்கானா வாரியம் பீகாரில் உருவாக்கப்பட உள்ளது. மக்கானா என்ற மூலிகையின் உற்பத்தியை முன்னெடுத்தல், அதன் மதிப்புக் கூட்டுப் பொருட்களை உருவாக்குவதல் ஆகியவை இங்கு மேற்கொள்ளப்படும்.
இதையும் படிங்க: 1.7 கோடி விவசாயிகள் நலனுக்கான பிரதமரின் தன் தான்ய கிரிஷி யோஜனா...மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
மக்கானா உற்பத்தி செய்யும் விவசாயிகள் வேளாண் உற்பத்தி அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்படுவார்கள். மேலும் இந்த வாரியம் மக்கானா விவசாயிகளுக்கு பயிற்சியும், ஆதரவும் அளிக்கும். அனைத்து அரசின் உதவிகளையும் மக்கானா விவசாயிகள் பெறுவார்கள். உடான் திட்டத்தின் கீழ் பீகார் மாநிலத்தில் புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்படும். ஏற்கனவே இருக்கும் பாட்னா விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். பீகார் மாநில உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.
பீகார் தேர்தலுக்கான அறிவிப்புகள்: பீகார் மாநிலத்தில் நடப்பாண்டு நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதையடுத்து அந்த மாநிலத்துக்கு முக்பகியத்துவம் அளிக்கும் வகையிலான திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மேலும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அணிந்து வந்திருந்த சேலை பீகாரின் மதுபானி கலை அச்சிடப்பட்ட சேலையாகும். மதுபானி கலை என்பது பீகாரின் மிதிலா பிராந்தியத்தின் புகழ்பெற்ற கலையாகும்.