மதுரை: அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் அமைப்பின் மாநில மாநாடு வரும் 14ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் மதுரையில் நடைபெற உள்ளது. இது குறித்து மதுரை அருண் பிரசாந்த் தாக்கல் செய்த மனுவில், "இந்த மாநாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொறுப்பாளர்கள் பங்கு பெற உள்ளனர். இந்த மாநாட்டில் முக்கிய நிகழ்வாக 8ஆம் தேதி மதுரை மன்னர் கல்லூரியில் இருந்து பழங்காநத்தம் ரவுண்டானா வரை மாணவர்கள் பங்கேற்கும் ஊர்வலமும், அதனைத் தொடர்ந்து மாநாடும் நடைபெற உள்ளது.
இதற்காக ஊர்வலம் மற்றும் மாநாட்டின் போது கூட்டத்திற்கு அனுமதி வழங்கி, பாதுகாப்பு வழங்க மதுரை மாநகர காவல் ஆணையருக்கு மனு அளித்ததாகவும், அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை எனவும், ஆகையால் மாநில மாநாடு மற்றும் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் நீதிபதி முன் நேற்று (பிப்.7) விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் இது பொது நல வழக்காக விசாரிக்க முடியாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற அனுமதி சம்பந்தமாக விசாரிக்கும் தனி நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது.
பின்னர் இந்த மனு மீதான விசாரணை நீதிபதி தனபால் முன்பு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆஜராகி, மனுதாரர் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தும் இடம் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி எனவும், மேலும் பள்ளி கல்லூரிகள் அமைந்துள்ளதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை கருத்தில் கொண்டு அப்பகுதியில் அனுமதி வழங்க முடியாது என வாதிட்டார்.
இந்த வழக்க விசாரித்த நீதிபதி தனபால், வழங்கிய தீர்ப்பில், பழங்காநத்தம் ரவுண்டானா போக்குவரத்து நிறைந்த பகுதியாகவும், பள்ளி கல்லூரிகள் மாணவர்கள் அதிக அளவில் வரக்கூடிய பகுதியாக இருப்பதாலும் அங்கு பேரணி நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: இன்னும் எவ்வளவு நாள்? மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக புனரமைப்பு பணிகள் எப்போது முடியும்? - MADURAI GANDHI MUSEUM
மேலும், மனுதாரர் தேவைப்படும் பட்சத்தில் ராஜா முத்தையா மன்றம் பகுதியில் இருந்து தமுக்கம் - காந்தி மியூசியம் வரையில் மாலை 3:30 முதல் 4:30 மணி வரை பேரணி மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்திக் கொள்ளலாம் அல்லது 5 முதல் 6.30 வரை பழங்காநத்தம் ரவுண்டானாவில் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளலாம். அவ்வாறு நடத்தும் பட்சத்தில் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாத வகையில் இருக்க வேண்டும், போதிய பாதுகாப்பு வசதிகளை போலீசார் செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.