கென்யா கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்தியர் நியமனம்! யார் இந்த தோடா கணேஷ்? - Dodda Ganesh kenya head coach - DODDA GANESH KENYA HEAD COACH
முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தோடா கனேஷ் கென்யா கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். `
Published : Aug 14, 2024, 5:31 PM IST
பெங்களூரு: இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தோடா கணேஷ். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தோடா கணேஷ் இந்திய அணிக்காக 4 டெஸ்ட் மற்றும் ஒரு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்நிலையில், கென்யா கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தோடா கணேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனம் குறித்து கென்யா கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கென்யா அணியை உலக கோப்பை தகுதிச் சுற்றில் வெற்றி பெறச் செய்வதே தனது லட்சியம் என தோடா கணேஷ் தெரிவித்துள்ளார். முன்னதாக 1996, 1999, 2003 மற்றும் 2011ஆகிய உலகக் கோப்பை தொடர்களில் கென்யா அணி விளையாடியது.
அதன்பின் ஏறத்தாழ 13 ஆண்டுகளாக கென்யா கிரிக்கெட் அணி எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் தொடரிலும் விளையாடவில்லை. அந்த அணி உலக கோப்பை தகுதிச் சுற்றிலும் வெற்றி காணவில்லை. இதுகுறித்து பேசிய தோடா கணேஷ், கடந்த 10 ஆண்டுகளாக கென்யா அணியில் எந்தவிதமான சூழல் நிலவியது என தனக்கு தெரியாது என்றும் ஆனால் கென்யா அணியை உலக கோப்பை தொடரில் தகுதி பெற வைப்பதே தன்னுடைய தற்போதைய இலக்கு என்றும் அவர் கூறினார்.
ஒரு காலத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளுக்கு கடும் சவால் அளிக்கக் கூடிய அணியாக கென்யா இருந்தது. பல திறமையான வீரர்கள் உலகத் தரம் வாய்ந்த அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர். காலப் போக்கில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் காரணமாக கென்யா அணி தற்போது கத்துக்குட்டி அணி போல் மாறியது.
கென்யா அணியின் தலைமைப் பயிற்சியாளராக தோடா கணேஷ் ஒரு வருடம் செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வரும் செப்டம்பர் மாதம் கென்யாவில் ஐசிசி 2027 உலகக் கோப்பையின் சேலஞ்ச் லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அந்தத் தொடரில் வெற்றி பெற்றால் மட்டுமே உலகக் கோப்பைக்கு கென்யா அணியால் தகுதி பெற முடியும்.
எனவே அந்தத் தொடரில் வெற்றி பெற தங்களுடைய அணிக்கு உதவுவதற்காக தோடா கணேஷை கென்யா கிரிக்கெட் வாரியம் தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது. ஒரு வருட ஒப்பந்தத்திற்கு பின்னர் அவரது பணிக் காலம் நீட்டிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்க்கல் நியமனம்! - Morne Morkel