சென்னை: பொருளாதாரத்தில் பின் தங்கிய, கிராமப்புற, மனவளர்ச்சி குன்றிய மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி படிக்கும் 5,000 பள்ளி மாணவர்களை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் கேளிக்கை பூங்காவை (Amusement Park) சுற்றி பார்க்க ராஜஸ்தான் இளைஞர் சங்கம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த சுற்றுலாவை கிண்டி ஆளுநர் மாளிகையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடக்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “நாம் அனைவரும் ஒரு குடும்ப உறுப்பினர்கள். ஆதரவற்ற குழந்தைகளுக்கு சேவை செய்வது கடவுளுக்கு சேவை செய்வதற்கு இணையானது. 30 வருடங்களுக்கு மேலாக பல சேவைகளை ஃபுட்பேக் அமைப்பு செய்து வருகிறது இதற்காக அந்த அமைப்புக்கு நன்றி.
பல வயதுடைய பள்ளி மாணவர்களை இங்கு பார்க்க முடிகிறது. மாணவர்கள் அனைவரும் கடினமாக படிக்க வேண்டும். இது எனது அறிவுரை. கல்வி மட்டும்தான் நமக்கு வலிமை, தலைமை பண்பு என எல்லாவற்றையும் கொடுக்கும். மாணவர்கள் யாரும் ஒரு நாளைகூட வீணடிக்க கூடாது. எத்தனை மணி நேரம் தூங்குகிறோம், எத்தனை மணி நேரம் படிக்கிறோம், எத்தனை மணி நேரம் விளையாடுகிறோம் என்பதை கணக்கு வைத்து சுய ஒழுக்கத்தோடு செயல்பட வேண்டும்.
பிரதமர் மோடி எழுதிய ‘எக்ஸாம் வாரியர்’ என்ற புத்தகத்தை அனைத்து குழந்தைகளும் படிக்க வேண்டும். மாணவர்கள் வாழ்வில் நேர மேலாண்மையை நெறிப்படுத்துவது, தேர்வுக்கு தயாராகுவது, லட்சியத்தையும் கனவையும் அடைவது என்பதை பற்றி பிரதமர் மோடி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதை படித்தால் அனைத்து மாணவர்களும் தெளிவு பெறலாம்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை., விவகாரம்: சிபிஐ விசாரணை வேண்டி ஆளுநர் ரவியிடம் மனு அளித்த பா.ஜ.க!
நான் ஒரு பின்தங்கிய கிராமப்புறத்தில் இருந்து தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். என் கிராமத்தில் மின்சார வசதிகூட கிடையாது. பள்ளிப் படிப்புக்கு எட்டு கிலோமீட்டர் தினமும் நடந்து செல்வேன். கடினமாக படித்ததால் தான் இன்று உங்களுக்கு முன் ஆளுநராக நிற்கிறேன்.
சுயஒழுக்கத்துடன், கடினமாக படித்தால் இன்ஜினியர், டாக்டர், விஞ்ஞானி, அறிவியலாளர் என யாராக வேண்டுமானாலும் ஆக முடியும். கனவு பெரிதாக காணுங்கள், கடினமாக உழையுங்கள் நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை எளிமையாக எட்டிவிடலாம். இன்று செல்லும் சுற்றுலாவில் எல்லாவற்றையும் கண்டு ரசியுங்கள். இன்று நீங்கள் பூங்காவுக்கு செல்வது சுற்றுலா மட்டுமல்ல, அதில் பலவற்றை கல்விக்காக கற்றுக்கொள்ள வேண்டும்” என ஆளுநர் பேசினார்.
அதன்பின் பிரதமர் மோடி எழுதிய 'எக்ஸாம் வாரியர்' என்ற புத்தகத்தை ஆளுநர் ரவி மாணவர்களுக்கு வழங்கினார்.