போர்பந்தர்: குஜராத்தில் உள்ள போர்பந்தர் விமான நிலையத்தில் இன்று (ஜன.5) மதியம் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் அதில் இருந்த விமானி உட்பட 3 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலம் போர்பந்தர் விமான நிலையத்தில் மதியம் 12.10 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக போர்பந்தர் காவல் கண்காணிப்பாளர் பகீரத்சிங் ஜடேஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான இலகுரக ஹெலிகாப்டர் (ALH) மூன்று பணியாளர்களுடன் போர்பந்தர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதை அருகே விழுந்து தீப்பிடித்தது'' என்றார்.
கமலா பாக் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கன்மியா இதுகுறித்து மேலும் கூறுகையில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் மூன்று பணியாளர்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டு போர்பந்தரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: அணுசக்தி துறையின் மூத்த ஆய்வாளர் ராஜகோபால சிதம்பரம் காலமானார்!
அவர்களில் இருவர் ஏற்கனவே இறந்துவிட்டனர். மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது ஒருவர் உயிருடன் இருந்தார். பின்னர் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே விமான நிலையத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அவர்களின் அடையாளம் இதுவரை தெரியவில்லை'' என கூறினார்.
இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ALH MK-III ஹெலிகாப்டர் கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி போர்பந்தரில் இருந்து புறப்பட்டு அரேபிய கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த ஹெலிகாப்டரில் பயணித்த மூன்று பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவம் நடந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த உடனேயே அதன் விமானி மற்றும் ஒரு பணியாளரின் உடல்கள் மீட்கப்பட்டன. மூன்றாவது நபரின் உடல் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்த தேடுதலுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.