மதுரை: கொடைக்கானலில் இருந்து வில்பட்டி - கோவில்பட்டி - புலியூர் - பேத்துப்பாறை ஆகிய சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதி வழியாக புதிய சாலை அமைக்க தடை விதித்து உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கொடைக்கானலைச் சேர்ந்த அசோகன் என்ற நபர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான கொடைக்கானலில், போக்குவரத்தை சரி செய்ய மாற்று வழி ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டது. சுற்றுலாத்துறை ஆணையரின் தலைமையில் அனைத்து அலுவலர்களைக் கொண்ட கூட்டம் நடத்தப்பட்டு கொடைக்கானல் முதல் வில்பட்டி - கோவில்பட்டி - புலியூர் - பேத்துப்பாறை வழியாக மாற்று பாதை அமைக்க முடிவு செய்துள்ளனர்.
இது சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதிக்குள் உள்ளது. ஏற்கனவே, வில்பட்டி - கோவில்பட்டி - நார்தான்தொட்டி - பெருமாள் மலை ஆகிய பகுதியில் சாலை அமைக்க பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், தற்போது முடிவு செய்யப்பட்டுள்ள வழியில் எவ்விதமான ஆய்வும் செய்யாமல் அவசரமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பிற்கு ஆபத்தானது.
இதையும் படிங்க: 'போலீசுக்கு நேரமில்லை.. இனி சிபிஐ விசாரிக்கட்டும்'.. ராஜேந்திர பாலாஜி வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் இல்லை. ஆகவே, கொடைக்கானலில் இருந்து வில்பட்டி - கோவில்பட்டி - புலியூர் - பேத்துப்பாறை ஆகிய சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதி வழியாக சாலை அமைக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு தொடர்பான விசாரணை நேற்று (ஜன.6) நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மனுதாரர் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.