சென்னை: பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், "பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கல்வி என வந்தாலே அன்பில் மகேஸ் பொய்யாமொழியை கார்னர் செய்ய வேண்டுமென பதிவிடுகிறார். அவசரகதியில் பதிவினை செய்கிறார். எங்கு நடந்தாலும் அது பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வருகிறதா? என தெரியாமல், எதுவாக இருந்தாலும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்று தான் கேள்வி எழுப்புகிறார். ரசிகர் மன்றத்தில் இருந்தவர் ஒட்டு மொத்த பள்ளிக்கல்விதுறையையும் ரசிகர் மன்றமாக மாற்றப் பார்க்கிறார் என குற்றச்சாட்டை வைக்கிறார்.
ஆனால், நாங்கள் பள்ளிக்கல்வித்துறையை ரசிகர் மன்றமாக மாற்றவில்லை, வானவில் மன்றமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். எங்களது மாணவர்கள் அறிவியல் சார்ந்து சிந்திக்க வேண்டும் எனவும், அறிவியல் சார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் எனப் பார்க்கிறோம். ஆனால் அவர் வயது, பொறுப்பை கடந்து தமிழ்நாட்டு முதலமைச்சரையும் விமர்சனம் செய்வதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கல்வியில் தமிழ்நாடு நிரூபித்துள்ளது:
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு அரசியல் செய்ய வேண்டும் என ஆசைப்படும் நீங்கள், தமிழ் இனத்திற்காக போராடுவதாகவும், தமிழுக்காக பாடுபடுவதாகவும் உங்கள் ஸ்டைலில் பேசிக் கொண்டு உள்ளீர்கள். சமூக வலைதளங்களில் பதிவில் ஜெயிப்பது முக்கியம் கிடையாது. ஒன்றிய அரசாங்கத்திடம் ஏதேதோ பிரச்சினைக்காக செல்கிறீர்கள். நீங்கள் டெல்லிக்குச் சென்று, ஒன்றிய அரசு சார்பாக கல்வியில் தமிழ்நாடு சிறப்பாக உள்ளது என ரிப்போர்ட் தருகிறோம். அதற்கேற்றது போல் அவர்களும் கல்வியில் நிரூபித்து வருகிறது எனக் கூறுங்கள்.
நான் பிடித்த முயலுக்கு 3 கால் என்பது போல்:
பள்ளி கல்வித்துறையில் மூன்றாண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் குறித்த புத்தகத்தையும் தருகிறேன், தேவைப்பட்டால் நானும் வருகிறேன். ஒன்றிய அமைச்சரிடம் கூறி தமிழ்நாட்டில் உள்ள 40 லட்சம் மாணவ செல்வங்களின் கல்விக்கான பல திட்டங்களில் பயன் அடைந்து வருவதை எடுத்துக் கோரி, ரூ.2,152 கோடியை வாங்கி கொடுத்தால் பெரிய மனிதருக்கு அழகு. எதுவும் செய்யாமல் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல், எங்களை குறை சொல்லி கொண்டிருப்பதும், வராத பணத்தை பற்றி ஏன் பேச மாட்டீர்கள்? என்பதுதான் எங்கள் கேள்வி.
எதிர்க்கட்சி என தங்களை கூறிக் கொண்டு குறை சொல்லி வருபவர்கள். இவர் துணை முதலமைச்சரை உயர்த்தி பிடிக்கிறார் என்று காரணத்தை வைத்து பள்ளிக் கல்வித்துறையை குறை கூற வேண்டும் என நினைத்தால் நல்ல மனிதரை உயர்த்தி பிடிப்பதும், எங்கள் இயக்கத்தைச் சார்ந்த எங்களுக்கான வருங்காலமாக இருக்கக் கூடியவரை பெருமைபடுத்த வேண்டும் என்றால், சித்தாந்தத்தில் தெளிவாகவும், கொள்கையில் உறுதியாக இருக்கக் கூடியவரை உயர்த்திப் பிடிப்பதால், அதனால் எங்களுக்கு அடிபடுகிறது என்று சொன்னாலும், உயர்த்தி பிடித்துக் கொண்டே தான் இருப்போம்.
பாலியல் குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு:
பள்ளிகளில் பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 2012ஆம் ஆண்டு அரசாணை 121 வெளியிடப்பட்டது. அந்த அரசணையின்படி, பாலியல் குற்றச்சாட்டிற்குள்ளான ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய முடியும். குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும். அவர்களின் கல்வி சான்றிதழ்கள் ரத்து செய்ய முடியும். இதுவரை பள்ளி சார்ந்து 238 வழக்குகள் வந்துள்ளன. அவற்றில் 56 வழக்குகள் மீது மார்ச் 10ஆம் தேதி இறுதி உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வழக்குகள் ஆய்வில் உள்ளன. மேலும், பாலியல் குற்றச்சாட்டில் பாதிக்கப்பட்டு நான்கு பேர் இறந்துள்ளனர். குற்றமற்றவர்கள் என 11 பேர் நிரூபிக்கப்பட்டுள்ளனர்.
இருந்தாலும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஆய்வுக்கு செல்லும் பொழுதும் 14417 என்ற தொடர்பு எண்ணை டி-ஷர்ட்டில் போட்டு கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இந்த எண் 24 மணி நேரமும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக வளாகத்தில் கால் சென்டர் இயங்கி கொண்டிருக்கிறது.
உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்:
14417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு நாளை பள்ளி உள்ளதா? எனவும், பொதுதேர்வு குறித்தது போன்று மாணவர்களுக்கு தேவையான எந்த சந்தேகமாக இருந்தாலும் கேட்டுக் கொள்ளலாம். மேலும், பள்ளியில் சந்தேகப்படும் வகையில் சில நிகழ்வு நடைபெற்றாலும் அதனை குறிப்பிடலாம்.
இதுபோன்று, மாணவர்கள் எந்த தகவலை கூறினாலும் அவர்களின் பெயர் மற்றும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் பள்ளிகளில் மாணவர் மனசு என்ற பெட்டி வைத்து மாணவர்கள் தங்களின் கருத்துக்களை எழுதி போடலாம் என கூறினோம். அந்த கருத்தின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கையையும் எடுத்து வருகிறோம்.
இதையும் படிங்க: Exclusive: "தமிழக மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் மத்திய அரசு".. அமைச்சர் அன்பில் மகேஸ் ஆதங்கம்!
ஒட்டுமொத்த ஆசிரியரையும் குறை கூறும் நிலை:
பெருமை வாய்ந்த தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறையில் பல ஆசிரியர்கள், தங்களின் சொந்த இடத்தை பள்ளிக்கு கொடுத்துள்ளனர். சில ஆசிரியர்கள் சொந்த செலவில் ஆசிரியரை நியமித்துக் கற்பிக்கவும் செய்துள்ளனர். மாணவர்களுக்கான பல திட்டங்களுக்கு நிதி கொடுத்து சாதித்துள்ளனர். ஒன்றிரண்டு செயல்கள் நடைபெற்று வரும் பொழுது, ஒட்டுமொத்தமாக ஆசிரியர் சமுதாயத்தைக் குறை கூறுவதாக அமைகிறது.
மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், அவர்கள் தைரியமாக புகார் தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி சாதித்துள்ளோம். இதுகுறித்து முக்கியமாக ஆய்வு செய்ய உள்ளோம். தமிழ்நாடு முதலமைச்சரும், பாலியல் குற்றங்கள் குறித்து ஒரு திட்டத்தை உருவாக்கித் தரும் படி கூறியுள்ளார்.
உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை குழு என்ன செய்ய முடியும் என்பது குறித்தும் ஆய்வு செய்து நல்ல முடிவு அறிவிப்போம். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார். நிதி சார்ந்த கோரிக்கைகள் அனைத்தும் முதலமைச்சர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது"
இவ்வாறு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.