சென்னை: தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான மணிகண்டன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் குடும்பஸ்தன். ரிலீஸான நாளிலிருந்து இப்போது வரை வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ’குடும்பஸ்தன்’ திரைப்படம். ’குட் நைட்’, ’லவ்வர்’ திரைப்படங்களுக்கு பிறகு மணிகண்டனின் ஹாட்ரிக் வெற்றிப் படமாக ’குடும்பஸ்தன்’ மாறியுள்ளது.
மணிகண்டனைத் தவிர முக்கிய கதாபாத்திரங்களில் குரு சோமசுந்தரம், இயக்குனர் சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் சான்வே மேக்னா, கனகம்மா, பிரசன்னா பாலச்சந்திரன், நிவேதிதா, முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியுள்ளார். சுஜித் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு வைஷாக் இசை அமைத்துள்ளார். சினிமாகாரன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
உலகளவில் 20 கோடிக்கும் மேல் குடும்பஸ்தன் திரைப்படம் வசூல் செய்துள்ளது. இது அந்த படத்தின் பட்ஜெட்டை விட மூன்று மடங்கு அதிகமாகும். தொடர்ந்து பாராட்டுகளை பெற்று வரும் குடும்பஸ்தன் திரைப்படத்தை கமல் ஹாசன், சமீபத்தில் பார்த்துவிட்டு படக்குழுவை நேரில் அழைத்து தனது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
’குடும்பஸ்தன்’ திரைப்படத்தை தயாரித்த சினிக்காரன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அந்த புகைப்படங்கள் வெளியிடப்படுள்ளன. இணையத்தில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. நடிகர் மணிகண்டன் கமல் ஹாசனின் தீவிர ரசிகர் என்பதை அவரது பேட்டிகளில் இருந்து அறியலாம்.
மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு திருமணமானவுடன் ஏற்படும் பொறுப்புகளையும் குடும்ப பிரச்சனைகளையும் எப்படி சமாளிக்கிறான், என்பதை நகைச்சுவையான கதையாக காட்சிப்படுத்தியிருந்தனர். அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சீரியஸான பிரச்சினைகளைக் கூட முழுக்க முழுக்க நகைச்சுவையாக ரகளையாக ஜாலியாக திரைக்கதை அமைத்து சொல்லியதால் முதல் நாளில் இருந்தே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
இதையும் படிங்க: தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதலை கொண்டாடும் ’காதல் என்பது பொதுவுடமை’ திரைப்படம்!
தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிய ’குடும்பஸ்தன்’ திரைப்படம் பிப்ரவரி மாதம் இறுதியில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ’குடும்பஸ்தன்’ வெற்றியைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மற்றுமொரு மினிமம் கியாரண்டி ஹீரோவாக மணிகண்டன் வளர்ந்துள்ளார் என பலரும் பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் குடும்பஸ்தன் படத்தின் வெற்றியை படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினர். மாபெரும் வெற்றியை அளித்த மக்கள் அனைவருக்கும் தங்களது நன்றியை தெரிவித்தனர்.