சென்னை: சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ’ரெட்ரோ’ (Retro). கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இப்படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்பராஜின் ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாரயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு ரெட்ரோ படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ’கண்ணாடி பூவே’ எனும் அந்த பாடல் முழுக்க முழுக்க காதல் தோல்வி பாடலாக அமைந்துள்ளது. சிறையில் இருக்கும் சூர்யா தனது காதலியான பூஜா ஹெக்டேவை நினைத்து பாடக்கூடிய சோகப்பாடலாக உருவாகியுள்ளது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் இப்பாடலை அவரே பாடியுள்ளார். பாடலாசிரியர் விவேக் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார். சூர்யா தாடி வளர்த்து இதுவரை போஸ்டரில் இல்லாத லுக்கில் உள்ளார். தேவர் மகன் படத்தின் கமல் வைத்திருப்பதை போன்ற ஹேர்ஸ்டைலுடன் காணப்படுகிறார். தாடியும் முடியுமான இந்த லுக் ரசிகர்கள் பலரை கவர்ந்துள்ளது.
வருகிற மே 1ஆம் தேதி ’ரெட்ரோ’ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் டீசர், பாடல்கள் என புரோமோஷனில் இறங்கியுள்ளது படக்குழு. முக்கியமாக படத்தின் முதல் ஷாட் எப்படி உருவாக்கப்பட்டது என காமிக்ஸ் வடிவத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தனர்.
இதையும் படிங்க: வன்முறை தெறிக்கும் ’மார்கோ’, காதல் நிறைந்த ’மதுரை பையனும் சென்னை பொண்ணும்’... காதலர் தின ஓடிடி ரிலீஸ்
மேலும் பூஜா ஹெக்டே தனது கேரியரிலேயே முக்கியமான படமாக ரெட்ரோ இருக்கும் என கூறியதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பார்த்த வெற்றியை பெறாத கங்குவா திரைப்படத்திற்கு பிறகு சூர்யாவிற்கு வெளியாகும் திரைப்படம் என்பதால் ரெட்ரோ வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது.