சென்னை: தமிழ்நாடு அரசின் கால்நடை, பால்வளம், மற்றும் மீன்வளத் துறை செயலர் சத்யபிரத சாகு அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேடுதல் குழுவை அரசு அமைத்துள்ளது. இக்குழுவில் ஆளுநரின் பிரதிநிதியாக தேசிய கல்வித் திட்டம் மற்றும் மேலாண்மைக்கல்வி நிறுவன துணைவேந்தரும், யுஜிசியின் உறுப்பினருமான பேராசிரியர் சசிகலா வாஞ்சாரியும், தமிழ்நாடு அரசின் பிரதிநியாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற இயக்குநருமான தனபாலனும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கல்விக்குழுவின் பிரதிநிதியாக கால்நடை பொருட்கள் தொழில்நுட்பத்துறையின் முன்னாள் தலைவரான ராபின்சன் ஜெ.ஜெ.ஆபிரகாமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆளுநரின் பிரதிநிதியான பேராசிரியர் சசிகலா வாஞ்சாரி குழுவின் தலைவராக செயல்படுவார். புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் வகையில் தேடுதல் குழு 3 பேர்களை வேந்தருக்கு பரிந்துரை செய்யும் என அதில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்வதில் ஆளுநர், அரசிற்கும் இடையே தொடர்ந்த மோதல் போக்கு நிலவி வருகிறது.
![தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை துணைவேந்தரை தேர்வு செய்ய 3 பேர் கொண்ட குழு அமைப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13-02-2025/tn-che-03-tanuvas-vc-search-committiee-script-7204807_13022025135109_1302f_1739434869_189.jpeg)
இந்நிலையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு அமைக்கப்பட்டுள்ள தேடுதல் குழுவில் பல்கலைக் கழக மானியக்குழுவின் பிரதிநிதி இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிட்டத்தக்கது. ஆனால் இந்தக் குழுவில் ஆளுநரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய கல்வி திட்டம் மற்றும் மேலாண்மைக்கல்வி நிறுவன துணைவேந்தரான பேராசிரியர் சசிகலா வாஞ்சாரி யுஜிசியின் உறுப்பினராகவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 10,11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: 25.57 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்! - TN PUBLIC EXAMS
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு தற்போது உள்ள துணைவேந்தர் செல்வகுமார் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமனம் செய்யப்பட்டார். அவரின் பதவிக்காலம் 2024 ஏப்ரல் மாதம் முடிவடைந்த நிலையில், மேலும் ஒராண்டு பதவி நீடிப்பு வழங்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் அவரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் முடிவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.