சென்னை: தமிழ்நாடு அரசு அனைத்துப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான, 15-வது ஊதிய ஒப்பந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை, இன்று (பிப்ரவரி 13) குரோம்பேட்டை, மாநகர் போக்குவரத்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில், போக்குவரத்து கழக 8 மண்டல இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில், ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களை நியமித்தல் கூடாது, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள படிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து, போக்குவரத்துக் கழகச் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும், 15 ஆவது ஊதிய ஒப்பந்த முதற்கட்ட பேச்சு வார்த்தையில் வெளிப்படைத்தமை இல்லை எனக் கூறி அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் தேமுதிக தொழிற்சங்க நிர்வாகிகள் கண்ணில் கருப்பு துணி கட்டியவாறு கூட்டத்தில் பங்கேற்றனர்.
சுமார் 4 மணிநேர பேச்சு வார்த்தைக்கு பிறகு சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ இந்த கூட்டத்தில் அக்டோபர் 1 2023 முதல் கணக்கிட்டு ஊதிய உயர்வு வழங்க கூறினோம். ஓய்வு பெற்றோரது பஞ்சப்படி நிலுவையை முழுமையாக வழங்கி, ஓய்வு பெறும்போதே பணப்பலன்களை முழுமையாக வழங்க வலியுறுத்தியுள்ளோம்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியுள்ளோம். மேலும், ஏப்ரல் 1,2003 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அவர்களை பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றினால், உடனடியாக அரசுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி கிடைக்கும். அதை வைத்து ஓய்வு பெற்ற தொழிலாளர் உட்பட அனைத்து ஊழியர்களுக்கான நிலுவைத்தொகையை வழங்கி முடியும்.
கடந்த ஆட்சியில் போடப்பட்ட 8 அரசாணைகளால் பல தடைகளும், குளறுபடிகளும் ஏற்படுகின்றன. தற்போது புதிதாக பணியாளர்கள் தேர்வு செய்வதற்கும் அதிமுக ஆட்சியின் அரசாணைகள் தடையாக உள்ளன. எனவே, அவற்றை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியுள்ளோம்.
![கண்களை கட்டிக்கொண்டு கூட்டத்தில் பங்கேற்ற போக்குவரத்து தொழிற்சங்கத்தினர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13-02-2025/tn-che-03-ministertranportmeeting-byte-script-7208368_13022025165841_1302f_1739446121_735.jpg)
இட நெருக்கடியால் போக்குவரத்து தொழிற்சங்கங்களை இரண்டாகப் பிரித்து, இரண்டு நாட்கள் தனித்தனியே ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. படிப்படியாக அனைத்து பிரச்சனையையும் தீர்க்கப்படும் எனவும், போக்குவரத்து கழகங்களுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்களை புதிதாக விரைவில் நியமிக்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையடுத்து தொமுச தலைவர் நடராஜன் கூறுகையில், “பொதுத்துறையான மின்சாரத்துறை ஊதியத்தை கணக்கு வைத்து, ஊதிய உயர்வையும் தீர்மானிக்க கூறியுள்ளோம். எந்த சங்கத்தையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. இரண்டு நாட்கள் பேச்சு வார்த்தை நடப்பதால் அனைத்து சங்கத்தினரும் கூடுதல் நேரம் பேச முடிகிறது. போக்குவரத்துத் துறையில் தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், மினி பேருந்து சேவைக்கு ஏற்கனவே இருந்த நடைமுறைகளே பின்பற்றப்படும் என்பதால் தனியார் மயம் குறித்து அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் கூறியுள்ளார்.
தனியார் மூலம் சென்னையில் பேருந்துகளுக்கு ஓட்டுநர்கள் நியமிப்பதற்கான டெண்டர் விடப்பட்டால், நீதிமன்றங்கள் மூலம் அந்த டெண்டர்களை ரத்து செய்ய முடியும் . தனியார் மயம் குறித்த அமைச்ச்சரின் கருத்து மீறப்பட்டால் நாங்கள் மீண்டும் அதுகுறித்து அமைச்சரிடம் வலியுறுத்துவோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதன் பின்னர், அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “அனைத்து தொழிற்சங்கத்தினரையும் அழைத்து பேசாமல், 70 சதவீத சங்கத்தினரை நாளை (பிப்ரவரி 14) தனியாக வரவழைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்கள் கண்களை கட்டிக் கொண்டு பேச்சுவார்த்தையில் பங்கேற்றோம். சமூக நீதி பேசும் திமுக தொழிற்சங்கத்தினரை இரண்டாக பிரித்து பேச்சுவார்த்தை நடத்துவது ஏன்?
ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக இறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அதிமுக ஆட்சியில் 13 வது ஊதிய ஒப்பந்தத்தில், 2.44 சதவீதம் உயர்வு வழங்கினோம். அதன் மூலம் குறைந்தபட்சம் ரூ.3,574 ஊதிய உயர்வு கிடைத்தது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை அரசு கடன் பெற்றாவது வழங்க வேண்டும். போக்குவரத்துத் துறை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தினோம்.
25 சதவீதம் ஊதிய உயர்வு தரும் வகையில் ஒப்பந்தத்தை இறுதி செய்ய வலியுறுத்தினோம். போக்குவரத்துத்துறை கடன் பிரச்சனையில் இருந்து மீள 1972 க்கு முன் இருந்ததைப்போல் போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் இருந்த சிற்றுந்துகளை சீர் செய்து மீண்டும் இயக்க வலியுறுத்தியுள்ளோம். ஒப்பந்த முறை ஓட்டுநர் நியமனத்தை கண்டித்துள்ளோம்.
தொழிலாளர்களை அரசு நேரடியாக நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம். அனைத்து போக்குவரத்து தொழிற் சங்கத்தினரையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டம் நடத்துவதாக அமைச்சர் கூறியுள்ளார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், நாளை நடைபெற உள்ள இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் 70 மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.