மதுரை: எதிரிகள் மற்றும் துரோகிகள் எடுத்து வைக்கும் வாதங்கள் அதிமுகவில் எந்த சேதாரத்தையும் ஏற்படுத்த முடியாது. ஏனென்றால், அதிமுக மக்கள் இயக்கம், மக்களால் பாதுகாக்கப்படுகின்ற இயக்கம், மக்களுக்காக உழைக்கின்ற இயக்கம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சி என்பது தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தொடங்கி, நீதிக்கட்சி, பின்னர் தந்தை பெரியார் தலைமையில் திராவிட இயக்கமாக உருவெடுத்தது. ஒடுக்கப்பட்ட மக்கள், விவசாய மக்கள், தொழிலாளர்கள் என அனைத்து தர மக்களையும் உள்ளடக்கிய அதிமுக 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கப்பட்டது.
எதிரிகள் மற்றும் துரோகிகள் எடுத்து வைக்கும் வாதங்கள் அதிமுகவில் எந்த சேதாரத்தையும் ஏற்படுத்த முடியாது. ஏனென்றால், அதிமுக மக்கள் இயக்கம், மக்களால் பாதுகாக்கப்படுகின்ற இயக்கம், மக்களுக்காக உழைக்கின்ற இயக்கம். முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் மறுவடிவமாகவே எடப்பாடி பழனிசாமி திகழ்ந்து வருகிறார்.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயக்குமார் அவர்களே...
— P.Ravindhranath (@OPRavindhranath) February 13, 2025
நேற்று - மாண்புமிகு அம்மா அவர்களின் மறுஉருவம் தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள்...
இன்று - மாண்புமிகு எம்.ஜி.ஆர் மற்றும் மாண்புமிகு அம்மா அவர்களின் மறுஉருவம் புரட்சித்தமிழர் திரு.எடப்பாடி பழனிச்சாமி...
நாளை…
ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் மலரச் செய்ய உழைத்துக் கொண்டிருப்பவர் எடப்பாடி பழனிசாமி. இது சோதனைக் காலம் என யாரும் சோர்ந்துவிட வேண்டாம். அதிமுகவுக்கு வரும் சோதனைகளை தொண்டர்கள் மன வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும். மீண்டும் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதற்காக மாபெரும் தியாக வேள்வியை நடத்திக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக குடிமராமத்துத் திட்டம், சமூக நீதிக்கு வழிவகுத்தது, புதிய மருத்துவக் கல்லூரிகள், அம்மா மினி கிளினிக், காவிரிப் பிரச்சனைக்குத் தீர்வு எனப் பல்வேறு சாதனைகள் நிகழ்ந்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்! பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு! |
தமிழகத்தில் பாலியல் சம்பவங்கள், சட்டம் -ஒழுங்கு சீர்கேடு, வாரிசு அரசியல், விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலை உள்ளது. இதை அப்புறப்படுத்த, அம்மா பேரவையின் சார்பாக அதிமுகவின் 82 மாவட்டங்களில், தமிழகத்தில் உள்ள 6 கோடியே 30 லட்சம் மக்களிடத்தில், கடந்த அதிமுக ஆட்சியின் சாதனைகள் குறித்தும், தற்போதைய திமுக ஆட்சியில் தமிழகம் எவ்வாறு அமைதி இழந்து தவிக்கிறது என்பதையும் எடுத்துச் சொல்லி வீதி வீதியாக திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.
இதில் வாக்காளர்கள், இளைஞர்கள் மாணவர்கள், விவசாய பெருமக்களைச் சந்திப்போம். வீடு வீடாகச் சென்று, வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களைச் சந்திப்போம். களத்தில் நேரில் சந்தித்து உண்மையை எடுத்துச் சொல்வோம். திமுகவின் மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். வருகிற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்” என்று அவர் பேசியுள்ளார்.
முன்னதாக, எடப்பாடி பழனிசாமிக்கு அத்திக்கடவு- அவிநாசி திட்டம் தொடர்பாக நடந்த பாராட்டு விழாவில், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் படங்கள் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்நிலையில், இந்த ஆர்.பி. உதயகுமார் ஈபிஎஸ்ஸுக்கு ஆதரவாக விடியோ வெளியிட்டுளளது குறிப்பிடத்தக்கது.
என்ன விளையாட்டு இது?: இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வனின் மகனும், முன்னாள் எம்பியுமான பி.ரவீந்திரநாத் தனது எக்ஸ் தளத்தில், “முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அவர்களே... நேற்று - மாண்புமிகு அம்மா அவர்களின் மறுஉருவம் தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள். இன்று எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா அவர்களின் மறுஉருவம் எடப்பாடி பழனிசாமி. நாளை யாரோ...? என்ன விளையாட்டு இது...?” என்று பதிவிட்டுள்ளார்.