தூத்துக்குடி: உலகம் முழுவதும் நாளை (பிப்.14) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தன்று ஒருவரின் காதலை வெளிப்படுத்தும் வகையில் காதலர்கள் தங்களுக்குள் ரோஜா மலர்களை பரிமாறிக்கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் முழுவதும் பூக்களின் விலை சற்று அதிகமாகவே இருந்ததால் மலர் வணிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், சிகப்பு வண்ணங்களில் உள்ள ரோஜாக்களின் விலை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.
அதன்படி, வழக்கமாக ரோஜா பூ ஒரு கட்டு ரூ.250-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு கட்டு ரூ.500 வரை விற்பனை ஆகிறது. தனியாக ஒரு ரோஜா பூ ரூ.15-க்கு விற்பனையான நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு ரோஜா பூ ரூ.30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு!
இதுகுறித்து பேசிய தூத்துக்குடி மலர் சந்தை வணிகர், “காதலர் தினத்தை முன்னிட்டு இங்கு ரோஜா பூ, செரிபுரா, கார்னேஸ் போன்ற பூக்கள் பெங்களூரு, ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த பூக்களை வைத்து கூடைகள், பூங்கொத்துக்கள் செய்கிறோம். இந்த முறை ஆன்லைனில் அதிகப்படியான விற்பனை நடைபெறுகிறது. தற்போது உலகளவில் காதலர் தினம் கொண்டாடப்படுவதால் மக்கள் மத்தியில் பூக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. மக்கள் பூக்களின் விலையையும் பொருட்படுத்தாமல் தங்களின் காதலை வெளிப்படுத்தப் பூக்களை வாங்கி செல்கின்றனர்” என்றார்.