தஞ்சாவூர்: இந்திய கடற்படையின் 75ஆம் ஆண்டு பவள விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, இன்றைய இளைய தலைமுறையினரிடம், ஒற்றுமை மற்றும் நாட்டுப்பற்று, வேலைவாய்ப்பு போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கும்பகோணம் சாஸ்திரா நிகர்நிலை பல்கலைக்கழக மைதானத்தில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
இந்திய கடற்படையின் பவள விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படை சிம்போனிக் இசைக்குழு சார்பில், பிரமாண்டமான இசை நிகழ்ச்சி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக சீனிவாச ராமானுஜன் மைய மைதானத்தில் நேற்று (பிப்.12) வெகு விமர்சையாக நடைபெற்றது.
இன்றைய இளைய தலைமுறையினரிடையே ஒற்றுமை மற்றும் நாட்டுப்பற்றை வளர்த்திடவும், இந்திய கடற்படையில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புகள் குறித்தும், அதனை தற்போதைய தலைமுறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கோடும் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்து வகையிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த இசை நிகழ்ச்சியில், தேசபக்தி பாடலான வந்தே மாதரத்தில் தொடங்கி முப்படையினருக்கான பாடலுடன் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது. மொத்தம் 24 பாடல்களை பாடப்பட்ட நிலையில், "அந்த அரபிக் கடலோரம்" என்ற பாடலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக நடனமாடி, கைத்தட்டி கண்டு ரசித்தனர். அதனைத் தொடர்ந்து, 'தமிழா தமிழா, பாகுபலி, லியோ, ஹே மின்னலே, ஹம்மா ஹம்மா, அடியே மனம் நில்லுனா நிக்காதடி, சிங்கப்பெண்ணே' உள்ளிட்ட பல்வேறு பாடல்களுக்கும் பாடப்பட்டன.
இதையும் படிங்க: ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேக பணிகள் மும்முரம்: 54 அடி நீள தேக்கு மரம் வரவழைப்பு!
விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை பிரிவினரால் நடத்தப்பட்ட இந்த பிரமாண்டமான இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி மண்டல கடற்படையினர் செய்திருந்தனர். முன்னதாக, இதே போன்ற நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்ற நிலையில், நேற்று கும்பகோணத்தில் நடைபெற்றது. அடுத்த கட்டமாக சென்னையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில், தலைமை விருந்தினராக இந்திய கடற்படையின் ஆயுதப் படை தலைமை இயக்குநர் ரியர் அட்மிரல் ரூபக் பரூவா, சீனிவாச இராமானுஜன் மைய புல தலைவர் முனைவர் வி.ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, வண்ண விளக்குகள், செயற்கை வெண் புகைகள், பூ வானம் என வண்ணமயமாக நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியை வெகுவாக கண்டு ரசித்தனர்.