சேலம்: சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக லேப் டெக்னீஷியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது துறைரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டம், இரும்பாலை சாலையில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படித்து வரும் மாணவிகள் சிலர் மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு அனுப்பிய புகாரில், கல்லூரியில் பணிபுரியும் லேப் டெக்னீஷியன் வேலு (57) தங்களுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தார்கள்.
அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள 'விசாகா' குழு அமைத்து கல்லூரி முதல்வர் தேவி மீனாள் உத்தரவிட்டிருந்தார். அந்த குழுவினர் கடந்த இரண்டு மாத காலமாக 50க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டு வேலு மீதான குற்றத்தை உறுதிசெய்து அதற்கான அறிக்கையை தலைமைக்கு அனுப்பினர்.
இதையும் படிங்க: பாடல்கள் உரிமம்: சென்னை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்த இளையராஜா!
இதனை அடுத்து மருத்துவக் கல்லூரி இயக்குனரகம் அளித்த உத்தரவின்படி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி முதல்வர் தேவி மீனாள், லேப் டெக்னீஷியன் வேலுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் தொடர்ந்து அவர் மீது துறைரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.
அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் குறித்து துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகள் காவல் நிலையத்தில் இதுவரை புகார் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.