டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இம்பால் பள்ளத்தாக்கில் வாழும் பெரும்பான்மையினரான மெய்தி இன மக்களுக்கும், சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் வாழும் குக்கி பழங்குடி மக்களுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வன்முறை வெடித்தது. இதில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் மாநிலத்துக்கு உள்ளேயே குடிபெயர்ந்து முகாம்களில் வசித்து வருகின்றனர்.
மணிப்பூரில் வன்முறையை தடுக்கத் தவறியதாக இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பைரன் சிங் தலைமையிலான பாஜக அரசு மீது குற்றச்சாட்டு கூறி வந்தனர். 60 பேர் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில் பாஜகவுக்கு குக்கி சமூகத்தை சேர்ந்த 7 பேர் உட்பட 32 எம்எல்ஏக்கள் உள்ளனர். முதலமைச்சர் பைரன் சிங் மெய்தி இனத்தை சேர்ந்தவர் ஆவார்.இதனால் குக்கி சமூகத்தை சேர்ந்தவர்கள் முதலமைச்சர் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தனர். எனவே குக்கி சமூகத்தினர் ஏற்றுக் கொள்ளும் ஒருவரை முதலமைச்சராக்க வேண்டும் என்று பாஜகவுக்கு உள்ளேயே சில எம்எல்ஏக்கள் கட்சி மேலிடத்தை வலியுறுத்தி வந்தனர்.
மேலும், முதலமைச்சர் பைரன் சிங் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வெளியான ஆடியோ மாநிலத்துக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நாளுக்கு நாள் அதிருப்தி அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த 9ஆம் தேதி முதலமைச்சர் பதவியில் இருந்து பைரன் சிங் விலகினார். அவரது ராஜினாமாவை மணிப்பூர் ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் , 12 ஆவது சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான கூட்டத்தொடர் கடந்த 10ஆம் தேதி கூட்டப்படும் என ஆளுநர் அறிவித்திருந்தார். முதலமைச்சர் பதவி விலகியதை அடுத்து அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும் மணிப்பூர் பாஜக எம்எல்ஏக்களை டெல்லிக்கு வரவழைத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அடுத்த முதல்வர் யார் என்பதில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை.
மேலும் பாஜக வடகிழக்கு மாநிலங்களின் ஒருங்கிணைப்பாளர் சாம்பித் பத்ரா, மணிப்பூர் மாநில பாஜக எம்எல்ஏக்களை தனித்தனியாக அழைத்து பேசினார். அதிலும் எந்த ஒரு கருத்தொற்றுமையும் ஏற்படவில்லை. இந்த நிலையில், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று மாலை அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 1949ஆம் ஆண்டு முதல் மணிப்பூரில் 10 முறை குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்றுள்ளது. 2001 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2002 மார்ச் மாதம் வரை 11 ஆவது முறையாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. அதன் பிறகு தற்போது 12 ஆவது முறையாக அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்திருக்கிறது.