டெல்லி: புதிய வருமான வரி மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
கடந்த வாரம் மக்களவையில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது நடுத்தர மக்களை பெரிதும் கவரும் வகையில், வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ.12 லட்சம் ஆக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டார். மேலும், வருமான வரிச் சட்டத்தை எளிமையாக்கும் வகையில் புதிய மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார். அதன்படி மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது தாக்கல் செய்துள்ளார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது:-
தற்போது நடைமுறையில் உள்ள 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் இயற்றப்பட்டு 60 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன. எனவே அந்த சட்டத்தை எளிமையாக்கும் வகையில் புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பழைய சட்டத்தில் உள்ள ஏராளமான சொற்கள் மாற்றப்பட்டுள்ளன. படிப்பவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் சொற்கள் மாற்றப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
மேலும், 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் உள்ள முந்தைய ஆண்டு மற்றும் மதிப்பீட்டு ஆண்டு ஆகியவை மாற்றப்பட்டு அதற்கு பதிலாக வரி ஆண்டு என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வருமான வரி தாக்கல் செய்வோர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சிக்கலின்றி கணக்கை தாக்கல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எளியமையாக்கப்பட்ட வருமான வரி சட்ட மசோதா
எளிமைப்படுத்தப்பட்ட 2025 புதிய வருமான வரிச் சட்ட மசோதாவானது 536 பிரிவுகள், 23 அதிகாரங்கள், 622 பக்கங்களைக் கொண்டதாகும். இந்த மசோதா சட்டமாக இயற்றப்பட்டால், ஆறு தசாப்தங்களாக நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டம் 1961 மாற்றியமைக்கப்படும்.
முன்மொழியப்பட்ட சட்டத்தில், வருமான வரிச் சட்டம் 1961-இல் குறிப்பிடப்பட்டுள்ள 'முந்தைய ஆண்டு' என்ற சொல் 'வரி ஆண்டு' என்று மாற்றப்பட்டுள்ளது. மேலும், மதிப்பீட்டு ஆண்டு என்ற கருத்தும் நீக்கப்பட்டுள்ளது. தற்போது, முந்தைய ஆண்டில் (உதாரணமாக 2023-24) ஈட்டப்பட்ட வருமானத்திற்கான வரி, மதிப்பீட்டு ஆண்டில் (உதாரணமாக 2024-25) செலுத்தப்படுகிறது. இந்த முந்தைய ஆண்டு, மதிப்பீட்டு ஆண்டு என்ற கருத்து நீக்கப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்ட மசோதாவில் ‘வரி ஆண்டு’ என்ற ஒன்று மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது.
வருமான வரி மசோதா, 2025, தற்போதைய வருமான வரிச் சட்டம், 1961 இன் 298 பிரிவுகளை விட அதிகமாக, 536 பிரிவுகளைக் கொண்டுள்ளது. தற்போதைய சட்டத்தில் 14 அட்டவணைகள் உள்ளன. புதிய சட்டத்தில் 16 ஆக அதிகரிக்கும்.
குறைக்கப்பட்ட பக்கங்கள்:
இருப்பினும், அதிகாரங்களின் எண்ணிக்கை 23 ஆகவே இருக்கும். கடந்த 64 ஆண்டுகளாக செய்யப்பட்ட திருத்தங்கள் உள்பட, தற்போதுள்ள பெரிய அளவிலான சட்டத்தின் பக்கங்கள் 880-இல் இருந்து 622 ஆகக் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டம், 1961 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டபோது, 880 பக்கங்களைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசிய ஏ.எம்.ஆர்.ஜி & அசோசியேட்ஸ் மூத்த பங்குதாரர் ரஜத் மோகன், “பிரிவுகளின் அதிகரிப்பு, நவீன வழிமுறைகள், டிஜிட்டல் நிர்வாகம் மற்றும் வணிகங்கள், தனிநபர்களுக்கான நெறிப்படுத்தப்பட்ட விதிகளை உள்ளடக்கிய, வரி நிர்வாகத்திற்கான மிகவும் கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையை இந்த மசோதா பிரதிபலிக்கிறது. புதிய சட்டம் 16 அட்டவணைகள், 23 அதிகாரங்களை அறிமுகப்படுத்துகிறது," என்று தெரிவித்தார்.
பிரிவு 533 சொல்வதென்ன?
இந்த மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள ஒரு முக்கியமான தகவலையும் ரஜத் மோகன் விளக்கினார். அதாவது, வருமான வரிச் சட்டம், 1961-இல் இருந்து புதிய சட்ட மசோதாவில் இருக்கும் வேறுபாடு என்னவென்றால், முன்பு, வருமான வரித் துறை பல்வேறு நடைமுறை விஷயங்கள், வரித் திட்டங்களை செயல்படுத்த நாடாளுமன்றத்தை அணுக வேண்டியிருக்கும். ஆனால், இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அத்தகைய திட்டங்களைச் சுயாதீனமாக அறிமுகப்படுத்த அதிகாரம் பெறும் என்று தெரிவித்தார்.
புதிய சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டிருக்கும், பிரிவு 533-இன் படி, CBDT இப்போது வரி நிர்வாக விதிகளை உருவாக்கவும், டிஜிட்டல் வரி கண்காணிப்பு அமைப்புகளை அமல்படுத்தவும் முடியும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்திருக்கும் வருமான வரி மசோதா, பரிசீலனைக்காக நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட வாய்ப்புள்ளது.
இதுவரை வருமான வரிச் சட்டத்தின் மறுஆய்வு குறித்து பங்குதாரர்களிடமிருந்து 6,500 பரிந்துரைகளை வருமான வரித் துறை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.