விழுப்புரம்: தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியின் போது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இணைந்து ஜாக்டோ ஜியோ என்ற அமைப்பை நிறுவி தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற தொடர்ந்து போராட்டங்களை தீவிரமாக மேற்கொண்டனர். குறிப்பாக அவுட்சோர்சிங் முறையில் அம்மா கிளினிக் பணி நியமனத்திற்கும் அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் போராட்டம் நடத்தின.
மேலும், திமுக எதிர்கட்சியாக இருந்தப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நடத்திய போராட்டங்களிலும் கலந்துக் கொண்டு ஆட்சி அமைந்த பின்னர் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தெரிவித்தனர். திமுகவின் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிகள் கடந்த 4 ஆண்டுகளாக திமுக அரசிற்கு எதிராக கருத்து தெரிவிக்காமல் இருந்த வந்த நிலையில், நாளை தமிழக சட்டசபை கூடவுள்ள சூழலில் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தற்பொழுது அதிரடியாக திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேயற்றியுள்ளது.
விழுப்புரத்தில் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது தமிழ்நாடு மாநில மாநாடு மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கோரிக்கைகள்
அதில், அரசு ஊழியர், சத்துணவு ஊழியர், அங்கன்வாடி, கல்லூரி, பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீதான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் ஆசிரியர்களின் நலன்கள், கோரிக்கைகள் கடந்த கால அதிமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட சூழலில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் நிகழும் போது அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழி திமுகவின் தேர்தல் அறிக்கையில் தரப்பட்டது.
மிக முக்கியமானதாக வரையறுக்கப்பட்ட பயன் கொண்ட பழைய பென்ஷன் திட்டம் மீட்கப்படும் என்ற அறிவிப்பு அமைந்தது. மேலும், அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான நிர்வாக தீர்ப்பாயம் அமைப்பது, ரூ. 8,000 அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட 17 பி நடவடிக்கைகளை திரும்பப் பெற்று நிவாரணம் வழங்குவது, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாக பணி அமர்த்தி காலமுறை ஊதியம் மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம் பணிக்கொடை என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் எண் 308 லிருந்து 318 வரை இடம்பெற்று இருந்தன.
பழைய பென்ஷன் திட்டம்
1.4.2003 முதல் அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டு எவ்வித வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய பயனுக்கும் உத்தரவாதம் இல்லாத நிலைமைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர். ஐந்து மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு திரும்புவதாக அறிவித்து அமலாக்கத்தை துவங்கியுள்ளன. ஆனால், தமிழ்நாடு அரசோ ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி ஆணையத்தில் அங்கமாக மாறாத சூழலிலும் பழைய பென்ஷன் திட்டம் மீட்கப்படுவது என்ற கோரிக்கையை ஏற்பது என்பதை நோக்கி நகரவே இல்லை.
சத்துணவு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகள்
தமிழ்நாட்டின் சத்துணவு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. 2021 தேர்தல் வாக்குறுதியில் தொகுப்பூதியம் ஒழிக்கப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 40 ஆண்டு காலமாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்களின் இக்கோரிக்கை கூட ஈடேறாத நிலையில் காலைச் சிற்றுண்டியை தனியார் முகமைக்கு வழங்கப்பட்ட முடிவு எதிர் மாறானதாகும்.
இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை
23 ஆண்டுகளாக எந்த பதவி உயர்வும் இல்லாத அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையை நிறைவேற்றப்படவில்லை. பல்கலைக்கழக கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்ற வேண்டும். பல்கலைக்கழகங்களிலும், அதேபோல கல்லூரி கல்வி இயக்குனரகம் போன்ற முகமைகளிலும் காலியாக உள்ள முக்கியமான பதவிகள் விரைந்து நிரப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளிலும் தீர்வு காணப்பட வேண்டியுள்ளது.
அவுட்சோர்சிங் முறை
தமிழ்நாட்டில் 64.24 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், அரசு ஊழியர், ஆசிரியர் பணிகளில் 5 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. 2024 இல் 75,000 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தபணிகள், பகுதி நேர ஊழியம், வெளிமுகமைகளிடம் பணி ஒப்படைப்பு மூலமாக நிரந்தர பணியிடங்கள் மீதான தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. உழைப்பு சுரண்டலும் நடத்தப்படுகிறது.
ஆசிரியர் பணியிடங்களை நிரப்புக
அதிமுக ஆட்சியில் பழிவாங்கப்பட்ட சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை வரைமுறைப்படுத்த வேண்டும்.தமிழ்நாடு முழுவதும் 4,500 க்கு மேற்பட்ட தலைமையாசிரியர் பணியிடங்களும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட வேண்டி உள்ளது. இவற்றை காலமுறை ஊதியத்தில் நிரப்புவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை கை விடுக்க
கல்வித்துறையை பொருத்தவரையில் தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ பல்வேறு பெயர்களில் மறைமுகமாக செயல்படுத்துவதை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழக அரசால் தமிழகத்திற்கான கல்வி கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி குழுவின் பரிந்துரை இன்னும் அமலாக்கப்படவில்லை. அதன் அமலாக்கத்தை உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக அரசுக்கு 2021 இல் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடமை உள்ளது. கடந்த மூன்றரை ஆண்டு காலமாக எதிர்பார்த்து காத்திருக்கும் அரசு ஊழியர் ஆசிரியர்களின் சத்துணவு ஊழியர்களின் சங்கங்களை அழைத்துப் பேசி நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும்'' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.