நாமக்கல்: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மூன்றாம் ஆண்டு கால்நடை மருத்துவம் படித்து வரும் மாணவி துளசிமதி முருகேசன் காஞ்சிபுரத்தை சொந்த ஊராகக் கொண்டவர்.
இவர் சமீபத்தில் பாரீசில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை புரிந்தார். இதனையடுத்து இவருக்கு மத்திய அரசு இன்று விளையாட்டு துறையில் உயரிய விருதான அர்ஜுனா விருதை அறிவித்துள்ளது.
விருது அறிவிப்பு குறித்த தகவல் வெளியானதும், துளசிமதி முருகேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "பெரிய வீராங்கனைகள் பெறுகின்ற அர்ஜுனா விருது இன்று எனக்கு அறிவிக்கப்பட்டது மிகப்பெரிய அளவிலான மகிழ்ச்சி தருகிறது. எங்கள் பெற்றோர், குடும்பத்தினரிடம் இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன். சிறுவயதில் இருந்து இதுபோன்ற சாதனைகள் செய்ய முடியுமா என ஏங்கி இருந்த எனக்கு தற்போது அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது." என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, "மத்திய அரசு இதுபோன்ற விருதை எனக்கு அறிவிக்கும் என்று எதிர்பார்க்காத நேரத்தில் விருதை அறிவித்துள்ளது நமது மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் ஒன்றாகும்.
விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகளை புரிய மத்திய, மாநில அரசுகள் ஊக்கம் அளித்து வந்ததால் பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று பெற்று சாதனை படைக்க முடிந்தது." என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.
அத்துடன், "மத்திய,மாநில அரசுகள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தன. TOPS திட்டத்தில் என்னை தேர்ந்தெடுத்து, அனைத்து விதமான பயிற்சிகள், சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கான உதவித்தொகை ஆகியவற்றை அரசுகள் வழங்கின.
மாதந்தோறும் விளையாட்டு உதவித்தொகை, ஊட்டச்சத்து உணவுகள் போன்றவற்றை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதேபோல, தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதுணையாக இருந்து பல்வேறு உதவிகளை செய்துள்ளார்." என்றும் துளசிமதி முருகேசன் தெரிவித்தார்.
அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ள மாணவி துளசிமதி முருகேசனுக்கு, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், நாமக்கல் பகுதி பொதுமக்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.