சென்னை: பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுவத்துவதற்கு அரபு நாடுகளில் பின்பற்றப்படும் கட்டுப்பாடுகளைப் போல, இந்தியாவில் தேசிய கொள்கை வரையறுக்கப்பட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்ற ரயிலில், வேலூர் அருகே கர்ப்பிணி பெண் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, “பாலியல் வன்புணர்வு அல்லது பாலியல் கொடுமைகள் நாளுக்கு நாள் அனைத்து மாநிலங்களிலும் பெருகி வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல சமூக ஊடங்களில் பாலியல் தொடர்பான வீடியோக்கள் அதிகமாக பகிரப்பப்படுகிறது. இவற்றை கட்டுப்படுத்த இந்திய மத்திய அரசு அல்லது மாநில அரசுகள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது வேதனை அளிக்கிறது.
இந்தியாவில் தேசிய கொள்கை:
அரபு நாடுகளில் இதற்கெல்லாம் ஒரு கட்டுப்பாடு இருக்கிறது, ஆனால் இந்தியாவில் இது போன்ற வன்கொடுமைகள் அல்லது குற்றங்கள் பெருகுவதற்கு கட்டுப்பாடற்ற சமூக ஊடக சுதந்திரம், யூடியூப் போன்ற வலைத்தளங்கள் இயங்குவது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இது வல்லுனர்களின் கருத்தாகவும் உள்ளது. ஆகவே, தேசிய அளவில் பாலியல் வன்கொடுமைகள் நிகழ்வது அதை தடுப்பதற்கு தேசிய அளவிலான ஒரு கொள்கை வரையறுக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு அரசு இது போன்ற குற்றங்களில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றாலும் இன்னும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு இதை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை, பள்ளி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை போன்றவைகளுக்கு விரைந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்றாலும் இது போன்ற குற்றங்கள் பெருகாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து பேசிய அவர் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது ஒரு அவசியமானது. ஆனால் இந்திய மத்திய அரசு தான் மேற்கொள்ள வேண்டும் என்ற நிலப்பாட்டை திமுக அரசு ஏற்கனவே முடிவு செய்திருக்கிறது. அறிவிப்பும் வெளியிட்டிருக்கிறது. மத்திய அரசு சாதி வாரி அடிப்படையில் மக்கள் தொகையை கணக்கெடுப்பு நடத்தினால் அது அதிகாரப் பூர்வமானதாகஅனைத்து மாநிலங்களுக்கும் உரிய ஆதாரபூர்வமாக அமையும்” என்றார்.
தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தில் ஜாதி வாரியாக பொறுப்புகள் வழங்கப்படுவதாக கூறபடுவது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “அதற்கு விஜய் தான் பதில் அளிக்க வேண்டும்” என்று கூறி புறப்பட்டுள்ளார்.