திருவாரூர்: மாவட்ட காவல்துறை பணியாளர் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.79 லட்சத்து 54 ஆயிரம் மோசடி செய்ததாக கூட்டுறவுச் சங்க செயலாளர் மற்றும் அவரது உதவியாளரை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், திருவாரூர் நகரத்திற்குட்பட்ட அப்பர் தெருவில், மாவட்ட காவல்துறை பணியாளர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன சேமிப்பு சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கம் திருவாரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்து, ஐந்து வருடத்திற்கு ஒருமுறை காவல்துறையினருக்கு திரும்ப வழங்குவது, காவல்துறை பணியாளர்களுக்கு கடன் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.
இந்த நிலையில் இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் தொடர்ந்து மோசடி நடந்து வருவதாகவும், கடந்த இரண்டு வருடமாக காவல்துறையினருக்கு சம்பள பிடித்தம் தொகை போன்றவை வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: 'ரயில் சைக்கோ கில்லர்'... பெண்களுக்கு மட்டுமே குறி... 'மாவு கட்டு' ஹேமராஜின் பகீர் பின்னணி!
இந்த நிலையில் மாவட்ட கூட்டுறவுத்துறை இணை பதிவாளர், சம்பந்தப்பட்ட கூட்டுறவு கடன் சங்கத்தில் 2021 முதல் 2023 வரை உள்ள கணக்குகளை ஆய்வு செய்துள்ளார். இதில், ரூ.79 லட்சத்து 54 ஆயிரம் மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்ட கூட்டுறவுத்துறை இணை பதிவாளர், திருவாரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட கூட்டுறவு சங்க செயலாளர் ஜெயகாந்தன் மற்றும் அவரது உதவியாளர் முருகதாஸ் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த மோசடியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டு தர வேண்டும் என மாவட்ட காவல்துறை பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.