இந்திய எண்கள் போல மாறுவேடமிட்டு வரும் சர்வதேச அழைப்புகளைக் கண்காணித்துத் தடுக்க ஒரு புதிய, மேம்பட்ட அமைப்பை இந்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. உள்நாட்டில் நிதி மோசடிகளை மேற்கொள்ள தொடர்ந்து பயன்படுத்தப்படும் இந்த ஏமாற்று நடைமுறை அதிகரித்து வருவதையடுத்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
‘சர்வதேச உள்வரும் போலி அழைப்புகள் தடுப்பு அமைப்பு’ என்று பெயரிடப்பட்ட இது, ஒன்றிய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், அதிகரித்து வரும் சைபர் குற்ற அச்சுறுத்தல்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும் தொலைத்தொடர்புத் துறை (DoT) மேற்கொண்டு வரும் முயற்சிகளில் இந்த முயற்சி குறிப்பிடத்தக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
மோசடி அழைப்புகளிலிருந்து இந்த அமைப்பு மக்களை எவ்வாறு பாதுகாக்கிறது?
சர்வதேச அழைப்புகள் உள்ளூர் இந்திய எண்கள் (+91-xxxxxxxxx) போல தோன்றும் வகையில், சைபர் குற்றவாளிகள் நுட்பங்களை உருவாக்கியுள்ளனர். காலர் லைன் ஐடென்டிட்டி (CLI) ஸ்பூஃபிங் என்று அழைக்கப்படும் இந்த முறையில், வெளிநாட்டிலிருந்து அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டாலும், இவை இந்தியாவிலிருந்து வருவது போல் தோற்றமளிக்கிறது.
இதனால் மக்கள் சந்தேகத்திற்கு இடமளிக்காமல், இவ்வாறான அழைப்புகள் மீது நம்பிக்கை வைக்கின்றனர். இந்த போலி அழைப்புகள் பொதுவாக பல்வேறு தீங்கிழைக்கும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை என்ன என்பதை கீழ் வருமாறு காணலாம்.
நிதி மோசடிகள்: மோசடி செய்பவர்கள் தனிநபர்களை ஏமாற்றி, முக்கியமான நிதித் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள அல்லது அங்கீகரிக்கப்படாத பணம் செலுத்தும்படி கூறுகிறார்கள்.
பிறரைப் போல நடித்தல்: மோசடி செய்பவர்கள் அரசாங்க அலுவலர்கள், சட்ட அமலாக்க அலுவலர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் போல் நடித்து பணம் அல்லது தனியுரிமைத் தரவைப் பறிக்கிறார்கள்.
சட்ட நடவடிக்கை அச்சுறுத்தல்கள்: பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன அல்லது கைது செய்யப்படுவார்கள் என்று அச்சுறுத்தப்படுகிறார்கள். இதனால் அவர்கள் பயந்து மோசடி செய்பவரின் கோரிக்கைகளுக்கு இணங்குகிறார்கள்.
மோசடி அழைப்புகளில் பயன்படுத்தப்படும் பொதுவான உரையாடல்கள்:
ஸ்பேம் அழைப்பை எதிர்கொள்ளும் பயனர் (கோப்புப் படம்) (Meta / ETV Bharat Tamil Nadu)
மொபைல் எண்களைத் துண்டிப்பதாக அச்சுறுத்தும் அரசாங்க அலுவலர்கள் (எ.கா., DoT/TRAI அலுவலர்கள்) போல் நடித்தல்.
போதைப்பொருள் அல்லது பாலியல் தொழில்கள் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தவறான கூற்றுக்கள்.
போலி டிஜிட்டல் கைதுகள் அல்லது நீதிமன்ற அழைப்பாணைகள்.
“இந்த போலி அழைப்புகள், நிதி மோசடிகள், அலுவலர்கள் போல் நடித்தல், பீதியை உருவாக்குதல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. போலி டிஜிட்டல் கைதுகள், மொபைல் எண் துண்டிப்பு போன்ற அச்சுறுத்தல் தொடர்பான சைபர் குற்றங்களையும் நாங்கள் கண்டிருக்கிறோம்" என்று அரசின் அறிக்கை இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது.
அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது:
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘சர்வதேச உள்வரும் போலி அழைப்புகள் தடுப்பு அமைப்பு,’ இந்த மோசடி அழைப்புகளை அவை பாதிக்கப்படக்கூடியவர்களை அடைவதற்கு முன்பே கண்டறிந்து தடுக்கிறது. மேலும், அழைப்பு முறைகளை பகுப்பாய்வு செய்வதன் வாயிலாக, போலியான எண்களை அடையாளம் கண்டு, அது பயனரை அடைவதற்கு முன்பே அழைப்பை தடுத்து நிறுத்துகிறது.
அமைப்பு தொடங்கிய தேதி: இந்த அமைப்பு அக்டோபர் 17-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது.
அமைப்பின் தாக்கம்: அறிமுகம் செய்யப்பட்ட முதல் 24 மணி நேரத்தில், ஒரு கோடியே 3 லட்சத்து 50 ஆயிரம் (13.5 மில்லியன்) போலி அழைப்புகளை அடையாளம் கண்டு இந்த அமைப்புத் தடுத்தது. குறிப்பாக இது அந்தக் காலகட்டத்தில் இந்தியாவிற்கு வரும் அனைத்து சர்வதேச அழைப்புகளில் 90 விழுக்காடு என்பது அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும்.
ஸ்பேம் அழைப்புகளைக் கண்காணிக்கும் இடம் (கோப்புப் படம்) (Meta / ETV Bharat Tamil Nadu)
இந்த அமைப்பு இந்திய காலர் ஐடிகளுடன் தோன்றும் சர்வதேச மோசடி அழைப்புகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கும் என்று ஒன்றிய அரசுத் தெரிவித்துள்ளது. இதற்காக ரூ.38 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
ஜூலை மாதம், மத்திய சர்வதேச அவுட் ரோமர் (CIOR) அமைப்பை உருவாக்குவதற்காக, தொலைத்தொடர்புத் துறைக்கு ரூ.38.76 கோடியை நிதியமைச்சகம் ஒதுக்கியது. இது சர்வதேச உள்வரும் போலி அழைப்புகள் தடுப்பு அமைப்பின் முந்தைய திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதலாக, ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகள் போன்ற தொலைத்தொடர்பு தொடர்பான மோசடிகளை விசாரிக்கும் டிஜிட்டல் உளவுத்துறை பிரிவுக்கு (DIU) ஒன்றிய அரசு அளித்துவந்த நிதியை அதிகரித்துள்ளது. தொலைத்தொடர்பு மோசடிகளுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த, 2024ஆம் நிதியாண்டில் அளித்த ரூ.50 கோடியை நடப்பு நிதியாண்டிற்கு (FY25) ரூ.85 கோடியாக உயர்த்தி வழங்கியுள்ளது.
இந்தியாவில் மோசடி அழைப்புகளை எதிர்த்துப் போராடுவதிலும், அதிகரித்து வரும் சைபர் குற்ற அச்சுறுத்தல்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதிலும் அரசின் இந்த முயற்சி ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.