வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் மற்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டில் துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன், அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்வதற்காக காத்திருக்கின்றனர்.
காலை ஏழு மணிக்கு துரைமுருகன் இல்லத்தில் வந்த அமலாக்கத்துறையினர், வீட்டில் யாரும் இல்லாததால், முகப்பு கேட்டைக் கடந்து சென்று திண்ணையில் காத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதே நேரத்தில் பள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கணக்கில் வராத பணம்
அமைச்சர் துரைமுருகனும், அவரது மகனும் மக்களவை உறுப்பினருமான கதிர் ஆனந்தனும் ஒரே வீட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வீட்டில் தற்போது சுமார் 10 மத்திய ரிசர்வ் படை பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதாவது, 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, வருமான வரித்துறை நடத்திய இந்த சோதனையில் துரைமுருகன் வீட்டில் இருந்து 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடு, பூஞ்சோலை சீனிவாசன் சிமெண்ட் கிடங்குகளில் சோதனை நடத்தி, கணக்கில் வராத பணத்தைப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக காட்பாடி போலீசில் வழக்குப்பதிவு செய்து வேலூர் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
அமலாக்கத்துறை சோதனை
இந்த சம்பவம் அப்போது பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், இந்த பணம் விவகாரம் தொடர்பாக இன்றைய அமலாக்கத்துறையினரின் சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: "காவல் துறை தடுத்தாலும் எங்கள் போராட்டம் நடைபெறும்" - அண்ணாமலை சவால்!
இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்வதற்காக வந்ததை அறிந்து, அவரது வீட்டின் முன்பாக திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கூடி இருக்கின்றனர். இந்த நேரத்தில், அமைச்சர் துரைமுருகன் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றுள்ளார்.
வேலூரில் உள்ள துரைமுருகன், கதிர் ஆனந்த் வீட்டின் முன்பாகத் தொண்டர்கள் கூடியிருப்பதால், மாவட்ட இணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து, பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சோதனையின் பின்னணி என்ன?
தமிழகத்தில் கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார்.
தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்ற புகாரின்பேரில் 2019 மார்ச் 29-ஆம் தேதி இரவு தொடங்கி மறுநாள் (மார்ச் 30) வரை துரைமுருகனின் வீடு மற்றும் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், துரைமுருகன் வீட்டில் இருந்து 10 லட்சத்து 57 ஆயிரத்து 10 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்கிடையில், ஏப்ரல் ஒன்றாம் தேதி சென்னையில் இருந்து துணை ராணுவப்படை பாதுகாப்புடன் வந்த வருமான வரித்துறை அலுவலர்கள் துரைமுருகனின் நெருங்கிய கட்சிப் பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனின் வீடு மற்றும் அவரது உறவினருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோன் உள்ளிட்ட 6 இடங்களில் மீண்டும் நடத்திய சோதனையில் மூட்டை மூட்டையாகவும், பெட்டி பெட்டியாகவும் 11 கோடியே 51 லட்சத்து 800 ரூபாய் கணக்கில் வராத பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
அதோடு, வேலூர் மக்களவைத் தொகுதியின் வார்டு வாரியான வாக்காளர் பட்டியல் விவரங்களுடன் கூடிய ஆவணங்களையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் சுமார் ரூ.9 கோடி அளவுக்கு புத்தம் புதிய 200 ரூபாய் நோட்டுகள் இருந்தன.
தேர்தல் நேரத்தில் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் காட்பாடி காந்தி நகரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் இருந்து பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக காட்பாடி காவல் நிலையத்தில் தேர்தல் செலவுக் கணக்கு அதிகாரி முத்து சிலுப்பன் அளித்த புகாரின்பேரில் கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. முறைகேடாகப் பணம் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் பூஞ்சோலை சீனிவாசனிடம் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதன் நீட்சியாக அமலாக்கத் துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.