சென்னை: நாட்டின் அதிவேக வளர்ச்சிக்கு வித்திடும் விதமாக சென்னை ஐஐடி மாணவர்களின் ‘ஹைப்பர்லூப்’ தொழில்நுட்பம் பார்க்கப்படுகிறது. முன்னேற்றத்திற்கான அடுத்த கட்டத்தில் இருக்கும் ஆய்வாளர்கள் குழு, தற்போது 410 மீட்டர் நீளம் கொண்ட வெற்றிட டியூபை அமைத்துள்ளனர்.
"அவிஷ்கர் ஹைப்பர்லூப்" குழுவின் பங்களிப்புடன், டியூபில் தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் TuTr Hyperloop என்ற தொடக்க நிறுவனம் உதவியுடன் தான் இந்த ஆய்வு இந்நிலைக்கு வந்துள்ளது. தற்போது இந்த செய்தியை தனது எக்ஸ் தளத்தில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார்.
அதில், “இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனை பாதையைப் பாருங்கள். 410 மீட்டர் நீளம் கொண்ட இதன் வேலைபாடுகள் முடிவடைந்துள்ளது. தம்ஸ்-அப் எமோஜியை இட்டு, ஐஐடி மெட்ராஸ்-டீம் ரயில்வேஸ், அவிஷ்கர் ஹைப்பர் லூப் குழு, TuTr ஆகிய புதிய படைப்பாளிகளுக்கு பாராட்டுகள். இடம் - ஐஐடி மெட்ராஸ், தையூர் வளாகம் (IIT Madras Thaiyur Campus),” எனப் பதிவிட்டுள்ளார்.
ஏன் முக்கியம் இந்த சாதனை?
Watch: Bharat’s first Hyperloop test track (410 meters) completed.
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) December 5, 2024
👍 Team Railways, IIT-Madras’ Avishkar Hyperloop team and TuTr (incubated startup)
📍At IIT-M discovery campus, Thaiyur pic.twitter.com/jjMxkTdvAd
தொலைநோக்கு பார்வையுடன் வடிவமைக்கப்பட்ட இந்த பைலட் திட்டம், இந்தியாவின் போக்குவரத்து வரலாற்றை மாற்றும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது. இது வெற்றிடத்தில் (வாக்யூம்) மிகக் குறைந்த காற்றழுத்த சூழலில், காந்த விசையின் அடிப்படையில் இயங்கும் முதல் முன்னோடி முயற்சியாகும்.
தற்போது உருவாக்கப்பட்டுள்ள 410 மீட்டர் சோதனை பாதை, 2025ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான ஹைப்பர்லூப் போட்டிக்கான மேடையை அமைத்துள்ளது. இந்த மாபெரும் முயற்சியில் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படும்.
இந்த மாபெரும் சாதனையை முன்னெடுக்க, சென்னை ஐஐடி, இந்திய ரயில்வே மற்றும் எல்&டி ஆகியவை ஒருங்கிணைந்து பணியாற்றியுள்ளன. TuTr எனப்படும் இக்குழு, தொழில்நுட்பத்தின் வருங்கால வளர்ச்சிக்கான தீர்வுகளை வடிவமைக்க ஒரு முக்கிய பங்காற்றுகிறது.
ஹைப்பர்லூப் தொழில்நுட்பம்:
ஹைப்பர்லூப் தொழில்நுட்பம், காற்றழுத்தம் குறைக்கப்பட்ட குழாய்களில் காந்தத்தின் இழுக்கும் சக்தியைப் பயன்படுத்தி கேப்சூல்களை அதிவேகமாக இயக்கும் ஒரு முறை ஆகும். இதனால், வழக்கமான ரயில் போக்குவரத்தை விட மிகவும் வேகமாகவும், குறைந்த நேரத்தில் பயணம் செய்ய முடியும். இது எரிபொருள் திறன்மிக்கதாகவும், சுற்றுச்சூழல் நட்புடையதாகவும் இருக்கும்.
இதையும் படிங்க |
ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் இந்தியாவின் போக்குவரத்துத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை முதல் பெங்களூரு வரை 30 நிமிடங்களில் பயணிக்க முடியும் என்ற கனவை சாத்தியமாக்கும் வாய்ப்பை இது வழங்குகிறது. மேலும், சரக்கு போக்குவரத்திலும் ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
இந்த தொழில்நுட்பத்தை வணிக ரீதியாக செயல்படுத்துவதில் பல்வேறு சவால்களும் உள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சி, உள்கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு கருத்துகள் போன்றவற்றை கவனத்தில் கொள்ள வேண்டிய சூழலும் இதில் நிலவிவருகிறது குறிப்பிடத்தக்கது.