சென்னை: ஸ்மார்ட்ஃபோன்கள், டேப்லெட்டுகள், கைக்கடிகாரங்கள் மற்றும் அணியக்கூடியபொருட்களுக்கான அடுத்த தலைமுறை அமோல்டு டிஸ்ப்ளேக்களை உருவாக்கும் நோக்குடன்புதிய ஆராய்ச்சி மையத்தை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது.
தேசிய உயர் சிறப்பு மையமான ‘அமோல்டு ஆராய்ச்சி மையத்துக்கு, மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், டாடா சன்ஸ் ஆகியவை நிதியுதவி அளிக்கின்றன. இந்தியாவில் காட்சி உற்பத்தித் தொழிலை மேம்படுத்துவதற்கான தேசத்தின் முன்முயற்சிக்கு இந்த மையம் தனது ஆதரவை வழங்கும்.
டிஸ்பிளேக்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த மையத்தில் இடம்பெறுவார்கள்.அதிநவீன தூய்மை அறையுடன், புனையமைப்பு மற்றும் பொருட்களை பகுப்பாய்வு செய்யும் சாதனங்களும் இங்கே உள்ளன.
சென்னை ஐஐடியில் கடந்த 21 ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் கிருஷ்ணன் மையத்தைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "மத்திய அரசால் நிதியளிக்கப்படும் தேசிய உயர்சிறப்பு மையங்களில் இதுவும் ஒன்று. ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், டேப்லெட்டுகள் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய அமோல்டு டிஸ்பிளேக்களைத் தயாரிப்பதற்கான நுட்பத்தை உருவாக்கும் நோக்குடன் இம்மையம் செயல்பட்டு வருகிறது. ‘பொருளாதார வேகத்தை’ அடிப்படையாகக் கொண்ட புதிய முறை காரணமாக இதுபோன்ற சாதனங்களை உற்பத்தி செய்வதற்கான மைக்ரோ-தொழிற்சாலை அளவிலான யோசனைகளை எதிர்பார்க்க முடியும்.
மொபைல்ஃபோன்களுக்கான OLED லைட்டிங், OPV பவர் சோர்ஸின் முன்மாதிரிகளை (prototype) உருவாக்கவும் இம்மையம் பணியாற்றி வருகிறது. புதுமைகளை வளர்க்கவும், தன்னம்பிக்கையை ஊக்குவிக்கவும், இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்தவும் இந்த மையத்தின் தொடக்கம் முக்கிய படியாக அமையும். இம்மையம் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதோடு மட்டுமின்றி உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்புகளில் உலகை வழிநடத்தும் இந்தியாவின் விருப்பத்துடன் எதிரொலிக்கும் தீர்வுகளையும் உருவாக்கும். இந்திய மற்றும் உலகளாவிய சந்தைக்குத் தேவையான அமோல்டு டிஸ்பிளேக்களை உருவாக்க புதுமையான நுட்பங்களை அமோல்டு ஆராய்ச்சி மையம் மேம்படுத்தும்." எனக் குறிப்பிட்டார்.
சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறும்போது, "அடுத்த தலைமுறை அமோல்டு டிஸ்பிளேக்களை உருவாக்கக்கூடிய இந்தியாவின் தனித்துவமான மையமாக அமோல்டு ஆராய்ச்சி மையம் திகழ்கிறது. இந்தியாவின் செமிகண்டக்டர் தொழில்துறையை மேம்படுத்தும் நாட்டின் முயற்சிக்கு இம்மையம் துணைபுரியும் வகையில் செயல்படும். இந்திய மற்றும் உலகளாவிய சந்தைக்கு அமோல்டு டிஸ்பிளேக்களை மேம்படுத்த புதுமையான நுட்பங்களை இந்த மையம் உருவாக்கும்." என்றார்.