சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிக்கு ஒருவருக்கு, பல்கலை வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, இவ்வழக்கில் தொடர்புடைய ஞானசேகரன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக சௌமியா அன்புமணி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் நேற்று (ஜனவரி 2) வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர். அப்போது, தடையை மீறி போராட்டம் நடத்தியதாகக் கூறி, அவர்களை கைது செய்த காவல்துறையினர் திருவல்லிக்கேணியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் மாலை 6 மணி வரை தங்க வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, சௌமியா மற்றும் அவரோடு கைது செய்த 300க்கும் மேற்பட்டோரை போலீசார் விடுவித்த நிலையில், சௌமியா அன்புமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதில், "இன்று காலையிலிருந்து எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு கிடைக்க தொடங்கியது. வாய் பேச முடியாத குழந்தைக்கு ஆதரவாக போராட வந்தோம். இரண்டு மூன்று மண்டபங்களில் பிரித்து அனுப்பியுள்ளனர். எங்களைக் கைது செய்ய வந்த காவல்துறை, பெண் குழந்தைகளைக் காப்பாற்றி இருக்கலாமே.
அயனாவரம், அண்ணாநகர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மதுரை, கருக்குளம் என பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்கிறது. நிறைய ஆடியோ வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மூன்று வருடங்களில் பாலியல் சம்பவங்கள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. பெண்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை சம்பவம்; பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு நேரில் விசாரணை..!
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாகத் தமிழ்நாடு இருக்க வேண்டும். வட இந்தியாவைப் போல தமிழ்நாட்டிலும் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க காவல்துறை வரவில்லை. ஆனால், எங்களை கைதுசெய்ய முதல் ஆளாக வருகிறார்கள். இவற்றையெல்லாம் கண்டு எனது மனது கொதிக்கிறது. எத்தனை பெண்கள் சாக வேண்டும். எங்கள் குழந்தைகளை எப்படி வெளியே அனுப்புவது. உங்களுக்கும் பெண் குழந்தை உள்ளது தானே.
பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்திட, பாமக மகளிர் சங்கம் சார்பில், தமிழக அரசைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் கைதுக்கு பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பு.! #AnnaUniversityIssue | #AmINext | #students | #SexualHarassment | #sexualassault | #harassment | #AnnaUniversity |… pic.twitter.com/ixR54S9iZD
— Sowmiya Anbumani (@Sowmiyanbumani) January 2, 2025
இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் இருப்பது வெட்கக்கேடாக உள்ளது. தொடர்ந்து குற்றங்கள் செய்யக்கூடிய மனநோயாளி ஞானசேகரனை இதுவரை ஏன் குண்டர் சட்டத்தில் அடைக்கவில்லை. எங்கள் போராட்டத்தால் தான் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். 300-க்கும் மேற்பட்ட பாலியல் வழக்குகள் இருந்தாலே அங்கு இரண்டு போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் கொண்டு வர வேண்டுமென்ற விதி உள்ளது. இங்கு ஒரு நீதிமன்றம் கூட ஏன் வரவில்லை," என்றார்.
அதனைத் தொடர்ந்து, பெண்களுக்காக பெண்கள் போராடாமல் என்ன செய்யப் போகிறோம். மதுவும், போதையும் தான் பாலியல் வன்கொடுமை நடக்கக் காரணம் எனக் குற்றம் சாட்டிய அவர், பாமக இளைஞர் அணித் தலைவராக முகுந்தன் நியமனம் தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்காமல் புன்னகைத்தபடி சென்றார்.