சென்னை: ‘ராயன்’ படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கியுள்ள திரைப்படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், ப்ரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் என இளம் நடிகர்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தனுஷ் தனது வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் பாடல்களும் டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (பிப்.11) சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
படத்தில் நடித்துள்ள பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ், ரபியா, ரம்யா ரங்கநாதன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் சரண்யா பொண்வன்னன், எஸ் ஜே சூர்யா, அருண் விஜய் இயக்குனர்கள் செல்வராகவன், ராஜ்குமார் பெரியசாமி, விக்னேஷ் ராஜா, தமிழரசன் பச்சைமுத்து, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஷ்ரேயஸ், "’இட்லி கடை’ படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் தனுஷால் இன்றைக்கு வர முடியவில்லை. தனுஷ் இன்று காலையில்தான் வர முடியவில்லை என சொன்னார். ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் புது முகங்களை கொண்டாடினது போல் இந்த படத்திலும் கொண்டாட வேண்டும் என தனுஷ் கேட்டு கொண்டார். இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை" என பேசினார்.
![‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ இசை வெளியீட்டு விழா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-02-2025/23525343_2.jpeg)
பின்னர் பேசிய SJ சூர்யா, "இந்த படத்தை பார்த்துவிட்டேன். ரொம்ப ஜாலியான படம். தமிழ் சினிமாவில் நடிகர்கள் பற்றாக்குறை இருக்கிறது. அதற்கு ஒரு ஒபட்டாளத்தையே தயார் செய்து அனுப்பியுள்ளார். முன்பு பாலச்சந்தர் இயக்கிய படங்களைப் போல மென்மையான படத்தைக் கொடுத்துள்ளார் தனுஷ். அதுவும் ராயனுக்கு பிறகு இப்படி ஒரு படத்தை கொடுத்துள்ளார் தனுஷ்.
இரண்டு முற்றிலும் வெவ்வேறான கதைகளை தனுஷால் மட்டுமே எடுக்க முடியும். சர்வதேச படங்கள், ஹிந்தி படம் என நிறைய வேலை செய்கிறார். ‘ராயன்’ படத்தில் முதல் நாள் தனுஷை நடித்து காட்ட சொல்லி அதனை ரெக்கார்ட் செய்து விட்டு இரவு அதை கேட்டு விட்டு மறுநாள் படபிடிப்பில் ஈஸியாக நடித்து விடுவேன். பவிஷ் அருமையாக நடித்துள்ளார்.
இந்த படம் ஜென் Z தலைமுறைக்கான படம் . எந்த தலைமுறையாக இருந்தாலும் காதலில் இருக்கும் பல விஷயங்கள் மாறுவதில்லை. எந்த வயதிலும் மாறாது. எந்த காலமாக இருந்தாலும் அம்மா அம்மா தான் காதல் காதல் தான். இந்த படத்தை பார்த்த போது குஷி பார்த்தது போல மகிழ்ச்சியாக பார்த்தேன்” என பேசினார்.
நடிகர் அருண் விஜய் பேசுகையில், "தனுஷ் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடியவர். இட்லி கடை படப்பிடிப்பு நடைபெறும்போது அங்கேயே ஸ்கிரிப்ட் எழுதுகிறார். பாடல் பதிவு செய்கிறார், நடிக்கிறார், இயக்குகிறார் எனக்கு மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்துள்ளார் தனுஷ்.
Gold sparrow பாடலை அடிக்கடி கேட்டு கொண்டிருக்கிறேன். ‘இட்லி கடை’ படத்தின் பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அதனால்தான் தனுஷால் வர முடியவில்லை. ’என்னை அறிந்தால்’ படத்தில் குழந்தையாக பார்த்த அனிகா இப்போது ஹீரோயினாக நடிக்கிறார், மகிழ்ச்சியாக உள்ளது" என்று பேசினார்.
சரண்யா பொன்வண்ணன் பேசுகையில், "எப்படி நாயகன் பத்தி இன்னமும் பேசுகிறார்களோ அதே மாதிரி விஐபி படத்தைப் பற்றி இப்போதும் பேசுகிறார்கள். எல்லாரும் தனுஷ் அம்மா என்றுதான் கூப்பிடுகிறார்கள். எனக்கு இது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தில் பவிஷ் எனக்கு மகனாக நடிக்கிறார். அதனால் தனுஷ் அவனை பொறாமையாக பார்த்தார். இது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு நிஜமாகவே அம்மாவாக நினைத்து கொண்டாடுபவர் தனுஷ். தனுஷிடம் எனக்கு பிடித்தது discipline. அதனை மிகச்சரியாக செய்து கொண்டிருக்கிறார். அவரது வெற்றிக்கு காரணம் கடுமையாக உழைப்புதான்" என்றார்.
இசை அமைப்பாளர் GV பிரகாஷ் பேசுகையில், "போர், பீரியட் போன்ற படங்களுக்கு இசையமைத்து விட்டு இப்படி ஒரு இளமையான படத்திற்கு பாடல் உருவாக்கியது ரொம்ப சந்தோசமாக இருந்தது.முழுக்க முழுக்க இளமையான படமாக இருந்தது. முதன் முதலில் ’பொல்லாதவன்’ படத்தில் தான் நானும் தனுஷும் இணைந்தோம். அது மிகப்பெரிய ஹிட்.
" i have watched #NEEK, it will be a sureshot. As like how #Jailer team gifted after success of the film, you should gift me also😂.That's why I didn't get any salary for the film😄"
— AmuthaBharathi (@CinemaWithAB) February 11, 2025
- GVPrakash pic.twitter.com/eDjBnv9AOs
அதேபோல் அவருடைய இயக்கத்தில் நான் முதல்முறையாக இணைந்துள்ளேன். இதுவும் பெரிய ஹிட்டாக அமையும். படத்திற்கு சம்பளம் வாங்கவில்லை என தயாரிப்பாளர் சொன்னார். ஆனால் ஜெயிலர் படம் வெற்றிக்கு பிறகு தயாரிப்பாளர்கள் படக்குழுவை சிறப்பாக கவனித்தனர். அதேபோல் தயாரிப்பாளர் ஷ்ரேயாஷ் இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கவனிப்பார் என்று நினைக்கிறேன்" என்றார்.
ராஜ் குமார் பெரிய சாமி "நடிகர் தனுஷ் ஒரு மகா கலைஞன். இயக்குநர், நடிகர் என பல்வேறு அவதாரங்களை வைத்துள்ளார். புது முகங்களை அறிமுகம் செய்து இருக்கிறார் அதற்கு வாழ்த்துகள்" என்றார்.
படத்தின் கதாநாயகன் பவிஷ் பேசுகையில், “ இந்தப் படத்தில் நிறைய பேர் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள். அந்த எல்லோருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன். ஒருநாள் ஸ்ரேயஸ் திடீரென்று ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ கதையில் நீதான் லீட் ரோல் நடிப்பதாக சொன்னார்.
![‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ இசை வெளியீட்டு விழா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-02-2025/23525343_1.jpeg)
இவ்வளவு பெரிய கூட்டத்தை பார்த்ததும் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. பதட்டமாக இருக்கிறது. எனக்கு என்ன பேசுவது என தெரியவில்லை. இந்தப் படத்தின் டிரெய்லர் பார்த்தபோது அது நான்தானா? என்று ஷாக் ஆகி விட்டேன். அந்த அளவுக்கு என்னை வித்யாசமாக காட்டியிருந்தார்கள். அதற்காக ரொம்ப நன்றி. இந்தப் படத்துல என்கூட நடித்த அனைவரையும் ப்ரெண்ட்ஸ்னுதான் சொல்லணும். அவர்களுடன் நடித்ததில் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம்.
என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நபர் தனுஷ் தான். அவர் எனக்கு செய்திருக்கக்கூடிய விஷயங்களுக்கு நன்றி மட்டும் சொன்னால் போதாது. அதேபோல அவரை கஷ்படுத்தியதற்கு ஒரு ஸாரி சொன்னால் மட்டும் போதாது. எதை நம்பி எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கொடுத்தார் என்று தெரியவில்லை. ஆனால் அதற்காக கடினமாக உழைப்பேன்” என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் களமிறங்கும் ”பரிதாபங்கள்” கோபி, சுதாகர்; புதிய படத்தின் டைட்டில் வெளியீடு!
படத்தின் நாயகி அனிகா சுரேந்திரன் பேசுகையில், “தனுஷ் என்னை நம்பி இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்கு நன்றி. இந்த வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய விஷயம். இதை என்னால் நம்பவே முடியவில்லை. இந்தப் படத்தின் மூலம் அவ்ரிடம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். இந்தப் படத்தில் பணியாற்ற அனைவருக்கும் நன்றி. ஜாலியான டீம். படக்குழுவிற்கு நன்றி. முக்கியமாக என் அம்மாவிற்கும் நன்றியை சொல்லிக்கொள்கிறேன். நான் குழந்தை நட்சத்திரமாக இருந்ததிலிருந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி” என பேசினார்.