சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு தடை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன் வைத்த கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லைச் சோ்ந்த சூரியமூா்த்தி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி விசாரித்த உயா்நீதிமன்றம், சூரியமூா்த்தி மனு மீது தோ்தல் ஆணையம் 4 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டது. மேலும், ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் இரட்டை இலை சின்னம் தொடா்பாக வழக்கு தொடா்ந்துள்ள மனுதாரா்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு ஒரு முடிவுக்கு வர வேண்டும் என தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
![அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-02-2025/tn-che-01-eccontinueadmkenquiry-script-7204624_12022025104857_1202f_1739337537_873.jpeg)
இந்த உத்தரவின் அடிப்படையில் தோ்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் தொடா்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில், அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்கக் கூடாது எனக் கோரி முன்னாள் எம்.பி.க்களான ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் கே.சி.பழனிசாமி உள்ளிட்டோா் தோ்தல் ஆணையத்தில் மனு அளித்தனா்.
அப்போது அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து அக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எடப்பாடி பழனிசாமியின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இது சம்பந்தமாக வழக்கு நிலுவையில் இருப்பதால் மனுக்களை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்தது.
இந்த தடையை நீக்கக் கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத் மற்றும் புகழேந்தி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்றது.
![முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-02-2025/tn-che-01-eccontinueadmkenquiry-script-7204624_12022025104857_1202f_1739337537_1018.jpeg)
அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கட்சி விதிகளில் திருத்தம் செய்தது, புதிய தலைமை தேர்வு செய்தது உள்ளிட்ட உள்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் இல்லை. உரிமையியல் நீதிமன்றத்திற்கு மட்டுமே அந்த அதிகாரங்கள் உள்ளன. தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மனு தாக்கல் செய்துள்ள யாரும் அதிமுகவில் உறுப்பினராக இல்லை. அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டனர். அதிமுகவில் எந்த பிளவும் இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு இருந்த ஆதரவு அப்படியே தொடர்கிறது. பொதுக்குழு உறுப்பினர்களும், 65 சட்டமன்ற உறுப்பினர்களில் 61 உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பதால், சட்டமன்றத் தேர்தல் நெருங்கிய உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் தலையிட்டு சின்னத்தை முடக்கினால் அது கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும். கட்சி தனக்கு சொந்தமானது என யாரும் உரிமை கூறாத நிலையில் உள்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்பதால் தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் தரப்பில், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனைத்து தரப்பினரின் விளக்கத்தைக் கேட்கும் வகையில் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. உள்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளின் உத்தரவுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்படும் என்றும், தற்போது இந்த மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மனுதாரர்கள் ரவீந்திரநாத், புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பெயர், கொடி பயன்படுத்த தடை விதித்திருந்தாலும், தற்போது கட்சி உறுப்பினர்கள் மன நிலைமை மாறி பெரும்பாலானோர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக உள்ளனர். அதனால், இது சம்பந்தமாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கில் நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கிய நீதிபதிகள், தேர்தல் ஆணையம் சட்டத்திற்கு உட்பட்டு உரிய விசாரணை நடத்தலாம் என தீர்ப்பளித்துள்ளனர்.