சென்னை: தென் இந்தியப் பெருங்கடலின் ஆழமான பகுதியில், கடல் தளத்திலிருந்து 4500 மீட்டர் (சுமார் 15,000 அடி) கீழே, மிகவும் மதிப்புமிக்க கனிம வளங்கள் நிறைந்த "ஹைட்ரோதெர்மல் சல்பைடு" (Hydrothermal Sulphide) படிமங்களை இந்திய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க கண்டுபிடிப்பு, இந்தியாவின் கடல் ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
முதலில் ஹைட்ரோதெர்மல் சல்பைடு என்பதை என்னவென்று அறியும் முன், ஹைட்ரோதெர்மல் செயல்முறை என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும். கடலுக்கு அடியில் இருக்கும் மலை முகடுகளின் கீழ் உருவாகும் எரிமலைக் குழம்புகள் பீறிட்டு ரிட்ஜுகள் வழியாக (மலைகளில் உருவாகும் இடைவெளி) வெளியே வரும்போது, கடல் நீரில் பட்டு ஆவியாகின்றன. இந்த செயல்முறை தான் ஹைட்ரோதெர்மல் என்று அழைக்கப்படுகிறது.
ஹைட்ரோதெர்மல் சல்பைடு என்றால் என்ன?
கடலின் அடிவாரத்தில், நிலத்தட்டுகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் பகுதிகளில், கடல் நீர் பாறைகளின் உட்புறத்தில் ஊடுருவி, மிக அதிக வெப்பத்தைப் பெற்று, கனிமங்களுடன் கலந்து, கருப்பு புகை போல வெளியேறுகிறது. இதுவே "ஹைட்ரோதெர்மல் வென்ட்" அல்லது "பிளாக் ஸ்மோக்கர்" எனப்படுகிறது.
இந்த வெப்ப நீரோட்டத்தின் காரணமாக, கடல் தளத்தில் தாதுக்கள் படிந்து, கனிம வளம் நிறைந்த படிமங்கள் உருவாகின்றன. இவையே ஹைட்ரோதெர்மல் சல்பைடு படிமங்கள் ஆகும். இந்த படிமங்களில் தாமிரம், கோபால்ட், நிக்கல், மாங்கனீசு, தங்கம், வெள்ளி, காப்பர் போன்ற மிகவும் மதிப்புமிக்க உலோகங்கள் நிறைந்துள்ளன.
இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட நிலம்
"தென் கடல் பகுதியில் ஆழ்கடலில் மெரிசியஸ் நாட்டிற்கு அருகில் இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கனிமங்கள் படிந்திருப்பதை முதல்முறையாக கண்டறிந்துள்ளோம். இந்தியாவிற்கு சர்வதேச கடல் அமைப்பு 10 ஆயிரம் சதுர அடியை ஒதுக்கீடு செய்துள்ளனர். அந்தப் பகுதியில் கனிமங்கள் இருப்பதை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் ஆய்வு செய்து வருகிறோம்."
"முதலில் கப்பலில் இருந்தும், அதனைத் தொடர்ந்து ஆழ்கடலுக்கு அடியில் சென்றும் ஆய்வு செய்வர். ரிட்ஜ்களில் பிளாக் சுமோக்கர் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வோம்." என்கிறார் தேசிய பெருங்கடல் ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIOT) ஆழ்கடல் தொழில்நுட்பத்தின் தலைவரும், அறிவியலறிஞர் டி.எஸ்.ரமேஷ் சேதுராமன்.
முதலில் படம்பிடித்த இந்தியா
இந்த ஆய்வு குறித்து பேசிய தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அறிவியலாளர் என்.ஆர். ரமேஷ், "ஆழ்கடலில் ஏற்படும் வெப்பத்தினால் எரிமலையில் இருந்து வரும் வெப்பத்தின் மூலம் கனிமப்படிவு முடிச்சுகளில் தாமிரம், கோபால்ட், நிக்கல் மற்றும் மாங்கனீசு போன்ற உலோககங்கள் உருவாகின்றன. முன்பு கப்பலில் இருந்து கடலின் புவியியல் தோற்றத்தை எடுத்துள்ளனர்."
"ஆனால் தற்போது அதன் அருகில் சென்று தோற்றத்தை ஆய்வு செய்துள்ளோம். ஆளில்லா வாகனத்தை பயன்படுத்தி , கடலில் படிமங்கள் உள்ள இடத்தில் இருந்து 120 மீட்டர் (சுமார் 400 அடி) உயரத்தில் முதலில் புவியியல் அமைப்பை ஆய்வு செய்து விட்டு, அதன் பின்னர் ஹைட்ரோ தெர்மல் சல்பைடு உருவாகும் சிம்னி எங்குள்ளது என்பதை கண்டுபிடித்து, புகைப்படம் எடுத்துள்ளோம். நேரடியாக இந்தியாவில் முதல்முறையாக புகைப்படம் எடுத்துள்ளோம்," என்று தெரிவித்தார்.
கண்டுபிடித்தது எப்படி?
தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIOT) ஆய்வாளர்கள், ஆளில்லா கடல் வாகனங்களைப் பயன்படுத்தி, ஆழ்கடலில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, 4500 மீட்டர் ஆழத்தில், கடல் தளத்தில் ஹைட்ரோதெர்மல் சல்பைட் படிமங்கள் இருப்பதை கண்டறிந்தனர்.
"சகார்நிதி கப்பலில் சென்று ஆய்வு செய்யும்போது, அந்தப் பகுதியில் கடல் அலைகள் சீற்றமாகத்தான் பொதுவாக இருக்கும். அந்த சூழ்நிலையில் கப்பலை நிறுத்துவம் கடினமாக இருக்கும். அதன் இடையை கப்பலை நிறுத்தி 30 மணி நேரம் ஆளில்லா வாகனத்தை 195 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து கண்டுபிடித்துள்ளோம். 80 சதுர கிலோ மீட்டர் தூரம் ஆய்வு செய்துள்ளோம்.
மேலும் படிவங்களுக்கு மேல் ஆளில்லா வாகனத்தை 5 முதல் 10 மீட்டர் உயரத்தில் இயக்க வேண்டும். அப்போது தான் புகைப்படம் நன்றாக இருக்கும். அது போன்ற நிலையில் இயக்கும் போது ஏற்றத்தாழ்வுகளால் கடினமாக இருக்கும். தொடர்ந்து ஆய்வு செய்து, எந்தப் பகுதியில் எவ்வளவு கனிமம் இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். ஆளில்லா வாகனத்தை செல்லும் வழிகளை முன்னதாகவே வடிவமைத்து பதிவு செய்வோம். அதனால் அது தொடர்ந்து செயல்பட்டு, திட்டமிட்டப்படி தரவுகளைப் பெற்றுத் தரும் ," என்கிறார் அறிவியலாளர் என்.ஆர்.ரமேஷ்.
தென் இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஹைட்ரோதெர்மல் சல்பைட் படிமங்கள், இந்தியாவின் கடல் ஆராய்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளன. இந்த கண்டுபிடிப்பு, புதிய கனிமவள ஆதாரங்களைத் தரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், ஆழ்கடல் சுரங்கம் தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியது இந்த நேரத்தில் அவசியமானதாகப் பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியான ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம், இந்த கண்டுபிடிப்பை பயனுள்ள வகையில் பயன்படுத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும்.