சென்னை: கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு ’சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக இசையில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கவுரவிக்க, இந்து குழுமத்தின் உதவியுடன் சென்னையில் உள்ள மியூசிக் அகாடமி சார்பில் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் சங்கீத கலாநிதி விருதுடன், எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் ரூ.1 லட்சம் பரிசும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2024ஆம் ஆண்டிற்கான சங்கீத கலாநிதி விருது கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி மியூசிக் அகாடமி செயற்குழு பிரபல கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க முடிவு செய்தது. பிரபல கர்நாடக இசைப் பாடகர் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், சங்கீத கலா ஆச்சார்யாஸ் பகவதுல சீதாராம சர்மா மற்றும் செங்கல்பட்டு ரெங்கநாதன் ஆகியோரின் மாணவரான டி.எம்.கிருஷ்ணா, பெரியாருக்கு ஆதரவு தெரிவித்து முற்போக்கு சிந்தனைகளுடன் பல்வேறு பாடல்களை கர்நாடக இசை மூலம் பாடியுள்ளார்.
சென்னை கடற்கரையில் ஊரூர் ஆல்காட் குப்பம் பகுதியில், பல்வேறு இசைக் கலைஞர்களை கொண்டு இசைத் திருவிழாவை நடத்தினார். மேலும் பெரியார், அம்பேத்கர் பற்றி பல்வேறு மேடைகளில் பேசியுள்ள டி.எம்.கிருஷ்ணா, சில ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் ஜெயந்தி அன்று காவடிச் சிந்து பாடலை பாடினார்.
இந்நிலையில் அவருக்கு சங்கீத கலாநிதி விருது வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியானதும் பல கர்நாடக இசைக்கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வகையில், பிரபல கர்நாடக இசைக் கலைஞர்களான ரஞ்சனி, காயத்ரி ஆகியோர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கப்படும் மார்கழி இசை நிகழ்ச்சியை புறக்கணிக்கப்பதாக அறிவித்தனர். மேலும் டி.எம். கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பரிசு வழங்கக்கூடாது என எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் ஸ்ரீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்தார்.
Had the privilege of attending the Sadas of the 98th Annual Conference and Concerts of the Madras Music Academy this evening.
— தமிழச்சி (@ThamizhachiTh) January 2, 2025
The Sangita Kalanidhi award, the highest honor in Carnatic music, was presented to my dear friend and visionary musician, @tmkrishna His tireless efforts… pic.twitter.com/cXfv8lqCKa
இந்நிலையில் சென்னையில் நேற்று (ஜன.02) நடைபெற்ற மியூசிக் அகாடமி நிகழ்வில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு கல்வியாளர் டேவிட் ஷீல்மேன் டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கியுள்ளார். இதனிடையே நேற்று மியூசிக் அகாடமி நிகழ்வில் டி.எம்.கிருஷ்ணா லுங்கி கட்டிக் கொண்டு வந்து விருதைப் பெற்றார். மேலும் டி.எம்.கிருஷ்ணா இந்த நிகழ்வில் எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘சுதந்திரம் வேண்டும்’ என்ற பாடலையும் பாடினார்.
இதையும் படிங்க: பிரமாண்ட இயக்குநர்களுக்கு எல்லாம் 'OG' ஷங்கர் தான் - இயக்குநர் ராஜமௌலி பாராட்டு!
இந்த சர்ச்சைகள் குறித்து தனியார் ஊடகத்திற்கு டி.எம்.கிருஷ்ணா அளித்த பேட்டியில், “லுங்கி என்றால் தாழ்த்தப்பட்ட மக்கள், உழைப்பாளிகள் மட்டுமே அணிவது என்றா கூறுவது? லுங்கி அணிந்தால் என்ன தவறு? நான் அணிந்து வந்ததற்கு ’சராங்கு’ என்று பெயர். அதனை இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்கள் செய்கின்றனர். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்களுக்கு ஆதரவு அளிக்கக் கூடாதா? லுங்கி என்றே அழைத்து கொள்ளுங்கள், அதனை அணிவதால் என்ன தவறு” என பேசியுள்ளார்.