சென்னை: கடந்த 2012 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கும் ’மதகஜராஜா’ படத்தின் அறிவிப்பு வெளியாகியது. கலகலப்பு முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கிய விஷால் படம் என்பதால் ரசிகர்களிடையெ மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. படம் குறித்து அறிவிக்கப்பட்ட வேகத்தில் மொத்த படப்பிடிப்பும் 2012ஆம் ஆண்டுக்குள் முடிவடைந்தது. இப்படம் 2013ஆம் ஆண்டே திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் வெளியாகவில்லை.
இந்த படத்தில் தற்போது கதாநாயகனாகிவிட்ட சந்தானம் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அஞ்சலி, வரலட்சுமி, நிதின் சத்யா, சோனுசூட், முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு என பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
அவரது இசையில் விஷால் பாடிய 'மை டியர் லவ்வரு' 11 வருடங்களுக்கு முன்பு வைரல் ஹிட்டானது. ஆர்யா கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் ‘மதகஜராஜா’வை தயாரித்தது. அப்போது ரசிகர்கள் மதகஜராஜாவை ‘எம்.ஜி.ஆர்’என சுருக்கமாக அழைத்து வந்தனர்.
இந்த வருடம் வரும், இந்த பொங்கலுக்கு வரும் என ஒவ்வொரு வருடமும் எதிர்பார்க்கப்பட்ட மதகஜராஜா. இணையத்திலாவது நேரடியாக ரிலீஸ் செய்யப்படுமா? என அடிக்கடி இயக்குநர் சுந்தர் சியிடம் கேட்கப்பட்டது. அண்மையில் நடந்த ’அரண்மனை 4’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கூட மதகஜராஜாவைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இப்போது மதகஜராஜா வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என சுந்தர் சி அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Kings of Entertainment @VishalKOfficial #SundarC @iamsanthanam
— Santhanam (@iamsanthanam) January 3, 2025
A @vijayantony musical
are all set to make this Pongal a Laughter Festival.
Gemini Film Circuit’s#MadhaGajaRaja
worldwide release on Jan 12.#MadhaGajaRajaJan12
#MGR #மதகஜராஜா @johnsoncinepro pic.twitter.com/9gfRXMUkH0
இந்நிலையில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12ஆம் தேதி 'மதகஜராஜா' திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை சந்தானம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: பிரமாண்ட இயக்குநர்களுக்கு எல்லாம் 'OG' ஷங்கர் தான் - இயக்குநர் ராஜமௌலி பாராட்டு!
அஜித்குமாரின் ’விடாமுயற்சி’ பொங்கல் ரிலீஸிலிருந்து பின்வாங்கிய நிலையில் பல சிறிய பட்ஜெட் படங்கள் தங்களது ரிலீஸ் தேதியை தொடர்ச்சியாக அறிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் 12 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு பொங்கல் ரேஸில் பத்தாவது படமாக 'மதகஜராஜா' இணைந்துள்ளது.
மதகஜராஜா உடன் ஷங்கர் இயக்கிய ’கேம் சேஞ்சர்’, பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ’வணங்கான்’, ஜெயம் ரவி நடித்த ’காதலிக்க நேரமில்லை’, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் மற்றும் மறைந்த முரளியின் இளையமகன் ஆகாஷ் முரளி நடித்த ’நேசிப்பாயா’, சண்முகப் பாண்டியன் நடித்த ’படைத் தலைவன்’, சிபிராஜ் நடித்துள்ள ’டென் ஹவர்ஸ்’ (10 Hours), கிஷான் தாஸ் நடித்த ’தருணம்’, தமிழில் முதன் முறையாக அறிமுகமாகும் மலையாள நடிகர் ஷேன் நிகேம் நடித்த ’மெட்ராஸ்காரன்’, சுசீந்திரன் இயக்கிய ’2கே லவ் ஸ்டோரி’ ஆகிய படங்களும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகிறது.