வாஷிங்டன்: கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான இரும்பு, அலுமினியம் பொருட்களுக்கு 25 சதவிகித வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும், இந்த வாரத்தின் இறுதியில் பிற இறக்குமதி வரிகளும் அறிவிக்கப்படும் என அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
இது குறித்து ஃபுளோரிடாவில் இருந்து நியூ ஓர்லேண்ட்ஸுக்கு ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று பயணம் மேற்கொண்ட போது செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு டிரம்ப்,"அமெரிக்காவுக்குள் வரும் அனைத்து இரும்பு பொருட்களுக்கும் 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும். இது தவிர அலுமினியம் பொருட்களுக்கும் இதே போல இறக்குமதி வரி விதிக்கப்படும்.
அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்யும் பிற நாடுகள் வரி விதிக்கும் போது, பதிலடியாக அமெரிக்காவும் இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிக்கும். இது குறித்து செவ்வாய்கிழமை அல்லது புதன் கிழமை அன்று அறிவிக்கப்படும். அவர்கள் எங்களுக்கு 130 சதவிகிதம் விதித்தால், அவர்களிடம் நாங்கள் எதுவும் வசூலிக்க மாட்டோம். இந்த வழியில் அது நிறுத்தப்படாது,"என்றார்.
டொனால்டு டிரம்ப் முந்தைய ஆட்சியின் போது வரி சலுகை, விதிமுறைகளை குறைப்பதற்கு முக்கியம் காட்டினார். இவர் அப்போது அதிபர் ஆவதற்கு முன்பே, சில இறக்குமதிகளுக்கு வரியை அதிகரிக்க தயாராக இருப்பதாக அச்சுறுத்துவதில் ஆர்வம் காட்டினார். குடியேற்றம் போன்ற சில விஷயங்களுக்கு கட்டாயமாக சலுகை பெறுவதற்கான கருவியாக இறக்குமதிகளை பார்க்கிறேன். தவிர அரசின் பட்ஜெட் பற்றாக்குறையை சரி செய்ய வருவாய்க்கு உதவும் ஆதாரமாகவும் பார்க்கிறேன் என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக பதவியேற்றார் வி.சி.சந்திரகுமார்!
உலக நாடுகளுக்கு பதிலுக்கு பதில் இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று டொனால்டு டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமையன்று நிதி சந்தைகள் இறக்கத்தை சந்தித்தன. வாடிக்கையாளர்களின் உணர்வுகள் இறக்கத்தில் இருந்ததால் பங்குகளில் விலைகள் வீழ்ச்சியடைந்தன. இது தொடர்பான ஆய்வில் கட்டணங்கள் கவலை தருவதாக பலர் பதில் அளித்துள்ளனர். கட்டணங்கள் காரணமாக வரும் மாதங்களில் பணவீக்கம் அதிகரிக்கும் என அமெரிக்கர்கள் எதிர்பார்ப்பதாக ஆய்வு புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
அதே நேரத்தில் இரும்பு, அலுமினியம் மீதான வரிகள் குறித்தோ அல்லது பதிலுக்கு பதில் வரிகள் விதிப்பது குறித்தோ விரிவான தகவல்களை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று டிரம்ப் விரிவாக ஏதும் தெரிவிக்கவில்லை. கனடா, மெக்சிகோவில் இருந்து வரும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் முன்பு அச்சுறுத்தி இருந்தார். ஆனால், அதனை 30 நாட்கள் நிறுத்தி வைத்திருந்தார். அதே நேரத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவிகிதம் கூடுதல் வரி விதித்திருந்தார்.