சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, வாழ்க்கையில் ஒருமுறையாவது வாய்ப்புண் தொந்தரவால் அவதிப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இது மிகவும் சாதாரண விஷயம் என்றாலும், அதைக் கவனிக்காமல் விட்டாலோ அல்லது அடிக்கடி வந்தாலோ பிரச்சனை பெரிதாகிவிடும். வாய்ப்புண் ஏற்பட்டால் சாப்பிடும் போதும், பேசும் போதும் வலி அதிகமாகும். இவை இயற்கையாகவே குணமாகும் தன்மையை கொண்டது.
ஆனால், 3 வாரங்களுக்கு மேல் இருந்தால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறது ஆய்வு. பலரும், வாய்ப்புண் சூட்டிற்காக வருகிறது என நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால், வாய்ப்புண் ஏற்பட உண்மையான காரணம் என்ன? தடுப்பது எப்படி? எந்த உணவு முக்கியம் என்பதை இந்த கட்டுரை மூலம் தெரிந்து கொள்வோம்.
![கோப்புப்படம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-02-2025/23511094_2.jpg)
காரணம் என்ன...யாருக்கும் வரும்? :
- முதலில் சொன்னது போல், குழந்தை முதல் முதியவர் வரை அனைத்து வயதினருக்கும் வாய்ப்புண் வரலாம். குறிப்பாக, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு, இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கு இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இவை மட்டுமல்லாமல், புகையிலை, பான் மசாலா, புகைப்பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், நிரீழிவு நோயாளிகள், வெற்றிலை போடுபவர்களுக்கு அடிக்கடி வாய்ப்புண் ஏற்படும்.
- ஆண்களைவிடப் பெண்களுக்கு வாய்ப்புண் தொல்லை அதிகம் என பல ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக, பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலங்களில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதால் இந்த தொல்லை ஏற்படுகிறது. மேலும், கருத்தடை மாத்திரைகளும் வாய்ப்புண் ஏற்படக் காரணமாகின்றன.
- சரிவிகித உணவைச் சாப்பிடாதவர்களுக்கு போலிக் அமிலம், வைட்டமின் பி6 மற்றும் பி12, இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும். இதனால், ரத்த வெள்ளை அணுக்கள் குறைவதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இந்த பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
- அதிகமாகக் கவலைப்பட்டாலும் வாய்ப்புண் வரும் என்றால் நம்ப முடிகிறதா? வேலை, வேலை என்று பரபரப்பாக இருக்கிறவர்களுக்கும், தேர்வு நேரங்களில் ஏற்படும் மன அழுத்தம் அதிகரிப்பதாலும் வாய்ப்புண் ஏற்படுவதாக நேஷ்னல் ஹெல்த் சர்வீஸ் (NHS) கண்டறிந்துள்ளது.
- செயற்கை வண்ண உணவுகள் ஒவ்வாமை, மருந்து ஒவ்வாமை, பற்பசை (Toothpaste) ஒவ்வாமை போன்ற ஒவ்வாமையும் முக்கிய காரணியாக இருக்கலாம். பல துலக்கும் போது பிரஷ் குத்துவதால் புண் உண்டாக வாய்ப்புகள் உள்ளது.
- இது தவிர, புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டால், முதல் ஒரு மாதத்திற்கு வாய்புண் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இது எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது என்கிறது NHS.
- மிகச் சூடாக காபி அல்லது டீ குடிப்பது
- கவனக்குறைவால் சாப்பிடும் போது கண்ணம் அல்லது நாக்கில் கடிபட்டு வாய்ப்புண் ஏற்படலாம்.
- வாயின் ஒரு பக்கத்தில் மட்டுமே உணவை மெல்லுபவர்களுக்கு நாளடைவில் வாய்ப்புண் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.
தடுப்பது எப்படி?:
- பெரும்பாலான வாய்ப்புண்கள் சரியான உணவு மூலம் அல்லது தானாகவே ஒன்று அல்லது இரண்டு வாரத்தில் குணமாகிவிடும் என்கிறது ஆய்வு. ஆனால், இதுவே, மூன்று வாரங்களுக்கு மேல் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற எச்சரிக்கிறது என்.ஹச்.எஸ்.
- சோடியம் லாரில் சல்பேட் (Sodium laurl sulphate) கலந்திருக்கும் டூஸ்பேஸ்டை பயன்படுத்தக்கூடாது.
- வாய்சுத்தம் காப்பதும், 6 மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வாய்வழி சுகாதாரம் பேண வேண்டும்.
- ஊட்டச்சத்து நிறைந்து சரிவிகித உணவுகளை உண்ண வேண்டும். மொறு மொறு உணவுகள், காரமான உணவுகள், சிப்ஸ், போன்ற அதிக உப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
எந்த உணவு சிறந்தது?: முருங்கைக்காய், சுண்டைக்காய், சோயாபீன்ஸ், முளை கட்டிய பயறு, கொண்டைக்கடலை, கேழ்வரகு, பச்சைப் பட்டாணி, கீரை வகைகள், முட்டை, தயிர், பால், தக்காளி ஆகிய உணவுகளை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வது ஊட்டச்சத்து குறைபாடை நிக்குவதால் வாய்ப்புண் பிரச்சனையையும் தடுக்கிறது.
![கோப்புப்படம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-02-2025/23511094_1.jpeg)
உடனடி நிவாரணத்திற்கு என்ன செய்வது?:
- தேனில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வாய்ப்புண் குணப்படுத்த உதவியாக இருக்கும். வாய்ப்புண் இருக்கும் இடத்தில் தேன் தடவுவது, இரவில் பாலில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிடுவது நன்மை தரும்.
- வாய்ப்புண் பிரச்சனையை இரண்டு நாளில் குணமாக்குவது தேங்காய் எண்ணெய். இரவு தூங்க செல்வதற்கு முன் வாய்ப்புண் இருக்கும் இடத்தில் தேங்காய் எண்ணெய் தடவி தூங்க செல்வதால், வாய்ப்புண் வலி நீங்கும்.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.