சென்னை: ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் ராஜாசிங் மற்றும் வருமான வரி துறை அதிகாரிகள் இருவர் ஜாமீன் கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை, திருவல்லிக்கேணியில் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி தனியார் நிறுவன ஊழியரிடம் காவலர்கள் 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா சிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப் மற்றும் பிரபு ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் சன்னிலாய்டு தவிர மற்ற 4 பேருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில், இவர்களை நீதிமன்ற உத்தரவில் காவல்துறை விசாரணையில் எடுத்து விசாரித்த போது, சென்னை ஆயிரம் விளக்கு காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ராயபுரத்தை சேர்ந்த தமீம் அன்சாரி என்பவரிடம் 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்ததும் தெரிய வந்தது.
இந்த வழிப்பறியில் உதவி ஆய்வாளர்கள் ராஜா சிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன் பிரதீப், பிரபு, வணிகவரித்துறை அதிகாரிகள் சுரேஷ், சதீஷ் , பாபு ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக காவல்துறை தெரிவித்தது. தொடர்ந்து அவர்களுக்கு எதிராக மிரட்டல், பொது ஊழியர் கடமை தவறி செயல்படுதல், நேர்மையற்ற முறையில் பிறர் சொத்துகளை அபகரித்தல், தகவலை மறைத்தல், அடைத்து வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது.
இதையும் படிங்க: வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த பாஜக நிர்வாகி...இளம்பெண் கொடுத்த புகாரால் அம்பலமான லீலைகள்!
ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் பதிவு செய்த வழக்கில் ராஜா சிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி உதவி ஆய்வாளர் ராஜா சிங், வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப் ஆகிய 3 பேர் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.கீதாராணி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணைக்காக வரும் வியாழக்கிழமை (பிப் 13) நீதிபதி தள்ளி வைத்தார்.