கலிபோர்னியா (அமெரிக்கா): கூகுள் நிறுவனம் தனது புதிய பிக்சல் 9 (Pixel 9) சீரிஸ் போன்களை அறிமுகம் செய்துள்ளது. பிக்சல் 9, 9 புரோ, 9 புரோ எக்ஸ்எல் என மூன்று ரகத்தில் வெளியிட்டுள்ளது. இவை கலிபோர்னியாவில் உள்ள மௌண்டைன் வியூ பகுதியில் உள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது வெளியாகி உள்ள இந்த பிக்சல் 9 வரிசை போன்களில் மூன்றிலும் நவீன AI தொழில்நுட்பங்களுடன், ஆண்ட்ராய்டு 14 (Android 14)-ல் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 7 ஆண்டுகளுக்கு சாஃப்ட்வேர் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் அளிக்கப்படும் என்றும் கூகுள் அறிவித்துள்ளது.
இந்த கூகுள் பிக்ஸல் 9 போன்களில் உள்ள அதி நவீன AI தொழில்நுட்பமான ஜெமினி (Gemini) மூலம், மேஜிக் எடிட்டர் (Magic Editor) அம்சம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி எடுக்கப்படும் புகைப்படங்களில் மிகவும் எளிமையாக இல்லாதவற்றை சேர்க்கவும், நீக்கவும் முடியும்.
ஆனால், இந்த மேம்படுத்தப்பட்ட ஜெமினி தொழில்நுட்பம் பிக்ஸல் 9 போன்களை வாங்குபவர்களுக்கு ஒர் ஆண்டுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும், பின்னர் மாதாந்திரச் சந்தா கட்ட வேண்டும் என கூகுள் அறிவித்துள்ளது. இந்த போன்கள் இம்மாதம் 22ஆம் தேதி முதல் ஷிப்பிங் செய்ய தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
Google Pixel 9 Price:கூகுள் பிக்ஸல் 9 128 ஜிபி ரேம் ரக போன்களின் ஆரம்ப விலை ரூ.74 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிக்ஸல் ப்ரோ ரக போன்களின் ஆரம்ப விலை ரூ.94 ஆயிரத்து 999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பிக்ஸல் ப்ரோ எக்ஸ் எல் ரக போன்கள் ஆரம்ப விலை ரூ. ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த போன்கள் அப்சிடியன் கருப்பு (Obsidian), விண்டர் கிரீன் (Wintergreen), பியோனி இளஞ்சிவப்பு (Peony), ஹேசல் (Hazel), ரோஸ் குவார்ட்ஸ் (Rose Quartz) உள்ளிட்ட நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போன்கள் ஃப்லிப்கார்ய், க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் உள்ளிட்ட தளங்களில் வாங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.