சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் "Umagine TN" தகவல் தொழில்நுட்ப உச்சிமாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இம்மாநாட்டை சென்னையில் நடத்துவதற்கான அறிவிப்பு கடந்த 2021-22 ஆம் ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
அதன்படி, Umagine TN மாநாடு 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இருமுறை வெற்றிகரமாக நடைபெற்றது. கடந்த வருட மாநாட்டின்போது 26 பொறியியல் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. தகவல்தொழில்நுட்பத் துறையில் மாநிலம் அடைந்துள்ள வெற்றியை வெளிப்படுத்தும் வகையில் மகத்தான கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) மூலம் UMAGINE TN 2025 என்னும் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் (9.1.2025 மற்றும்10.1.2025) நடைபெறுகிறது.
சென்னை வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்ப உச்சிமாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளையும் திறந்து வைத்து பார்வையிட்டார்.
Umagine TN 2025 மாநாட்டில்,சமமான பொது கொள்கைகள் மற்றும் நிர்வாகம் (Equitable Public Policy And Governance), காலநிலை தாக்கம் மற்றும் நிலைத்தன்மை (Climate Impact And Sustainability), பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழிலாளர் மாற்றம் (Economic Growth And Work Force Transformation) போன்ற முக்கிய பொருண்மைகள் குறித்த விவாதங்கள் நடைபெறுகின்றன.
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)மற்றும் ஆழ்நிலை Quantum தொழில்நுட்பம் (Deep Tech), காலநிலை மாற்றம் (Climate Change),Computing, தொடக்க சூழல் அமைப்பு (Startup ecosystem), உயிர்ப்பூட்டல் (Animation) காட்சி விளைவு, (Visual Effects) விளையாட்டு, (Gaming) மற்றும் களிப்படக் கதை (Comics), உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centre), திறன் மேம்பாடு (Talent Development) மற்றும் மின் வாகனம் (ElectricVehicle) போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் குறித்த விவாதங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்நிகழ்வில் 100-க்கும் அதிகமான தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 10,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியில், தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த் , இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் , HCL Tech நிறுவன முதன்மைசெயல் அலுவலர், HP இந்தியா நிறுவனத் துணைத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ,இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா இயக்குநர் மற்றும் பல்வேறு நாடுகளின் தூதரக அலுவலர்கள் மற்றும் அரசு உயர்அலுவலர்கள் கலந்து கொண்டனர்.