வேலூர்: தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து அரக்கோணம் வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்திச் செல்வதாக சென்னை ரயில்வே குற்ற புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சென்னை பெரம்பூரில் இருந்து அரக்கோணம் வரும் வழியில் பொதுப்பெட்டியில் போலீசார் ரகசிய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரயிலின் இருக்கைக்கு கீழே கேட்பாரற்றுக் கிடந்த 3 பைகளில் 11 பண்டல்களில் மொத்தம் 22 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா கடத்தி வரப்பட்ட பைகள் யாருக்கு சொந்தமானது என்று போலீசார் விசாரணை நடத்தியதில் யாரும் உரிமை கோரவில்லை.
இதையும் படிங்க: வேலூரில் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு : சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை! - DOCTOR GANG RAPE CASE IN VELLORE
அதனைத் தொடர்ந்து போலீசார் கஞ்சாவை கைப்பற்றி, அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசில் ஒப்படைத்தனர். இதே ரயிலில் தொடர்ந்து கஞ்சா கடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அதே நேரம் கஞ்சா கடத்தும் நபர்களை போலீசார் கைது செய்வதும் இல்லை என்றும் கூறப்படுகிறது. கேட்பாரற்று கிடந்ததாக சொல்லி கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர். குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.